வெளியிடப்பட்ட நேரம்: 21:12 (08/12/2017)

கடைசி தொடர்பு:21:12 (08/12/2017)

விவசாய நிலத்தில் கழிவுகள்... அலட்சிய அதிகாரிகள்... நடவடிக்கை எடுத்த ம.தி.மு.க நிர்வாகி!


 

மிழக அரசுக்குச் சொந்தமான காகித ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் 800 டன் சுண்ணாம்புக் கழிவை, கான்ட்ராக்டர் ஒருவர் அரவக்குறிச்சி அருகேயுள்ள விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் மலைபோல் கொட்டிக் குவித்து வைக்க, ம.தி.மு.க நிர்வாகி தலையிட்டு, விவசாயிகளுடன் களத்தில் இறங்கிப் போராடி, அந்த 800 டன் கழிவையும் உடனடியாக அகற்றச் செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

 

 
 

கரூர் மாவட்டம் மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள காகிதபுரத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்திருக்கிறது தமிழ்நாடு காகித ஆலை. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் இந்த ஆலை ஆரம்பிக்கப்பட்டபோது, விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், "இந்த ஆலை அமைந்தால், உள்ளூர்வாசிகளுக்கு வேலை தரப்படும்" என உத்தரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களைக் கொடுத்து காகித ஆலை அமைய அனுமதியளித்தனர். ஆனால், ஆலை தொடங்கப்பட்டபின் நிர்வாகம் உறுதியளித்தபடி உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கவில்லை. அதோடு, கடந்த பத்து வருடங்களாக ராட்சத போர்வெல்களைப் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்ச, சுற்றுவட்டாரத்தில் உள்ள பதினைந்து கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு போய் உள்ளதாக மக்கள் புலம்பி வந்தனர். அத்துடன் நிறுத்திக்கொள்ளாத ஆலை நிர்வாகம் அருகில் உள்ள காவிரி ஆற்றிலிருந்தும் வருடம் முழுக்க ராட்சத போர்வெல்கள் மூலம் தண்ணீர் எடுத்து, ஆலைக்குப் பயன்படுத்தினர். இதனால் கோடைக்காலத்தில் அப்பகுதி மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு, மக்கள் அல்லாடி வருகின்றனர். மேலும் இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரை அருகில் உள்ள விவசாய நிலங்களிலும், காவிரிப் பிரிவு வாய்க்கால்களிலும் திருப்பி விட, அந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் வாழை, நெல், வெற்றிலை எனப் பல பயிர்களும் அமோக விவசாயம் நடந்து வந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் மண்வளம் மாசுபட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். இதனால் தற்போது இந்த நிலங்களில் கோரைப்புல் மட்டுமே மண்டிக் கிடக்கின்றன. "காகித ஆலையின் கழிவுநீரை பாசன வாய்க்காலில் திருப்பிவிடக் கூடாது. ஆலைக்குள் இருக்கும் ராட்சத போர்வெல்களை மூடவேண்டும்" என்று வலியுறுத்தி இங்குள்ள விவசாயிகள் கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்கள்.  

 

அந்த லேட்டஸ்ட் காகித ஆலை கழிவுப் பிரச்னையின் சாராம்சம் இதுதான். தமிழ்நாடு காகித ஆலையிலிருந்து திரவ வடிவில் வெளியேறும் கழிவுநீரை ஆலை நிர்வாகம் அருகிலுள்ள விவசாயப் பாசன வாய்க்காலில் கலந்துவிடுகிறது. ஆனால், இந்தக் காகித ஆலையில் வெளியேறும் ரசாயனம் கலந்து சுண்ணாம்பு பவுடரை பலரிடம் கான்ட்ராக்ட் விட்டு, ஆலை நிர்வாகம் அப்புறப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆலையிலிருந்து அந்த ரசாயன பவுடர் கழிவை அப்புறப்படுத்த கான்ட்ராக்ட் எடுத்திருக்கும் தண்டபாணி என்பவர், கழிவுகளை ஆலை பக்கத்திலேயே கொட்டி வைத்தால் பிரச்னை வரும் என்று கருதினார். இதனால், வானம் பார்த்த பூமியான அரவக்குறிச்சி ஒன்றியத்தில் எங்கேனும் கொட்டி வைத்தால், பிரச்னை வராது என்று கருதியிருக்கிறார்.
 மேற்கொண்டு, நடந்தவற்றை ம.தி.மு.க அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் கலையரசனே விவரிக்கிறார்.

 

இந்த நிலையில்தான், இந்த ஆலைக்கழிவு பிரச்னையின் அடுத்த எபிசோடாக அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள தேரப்பட்டி கிராம விவசாயிகளும் பாதிக்கப்பட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட அரவக்குறிச்சி ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் கலையரசன் புண்ணியத்தில், இப்பகுதி விவசாயிகளின் நிலங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.தமிழ்நாடு காகித ஆலையிலிருந்து திரவ வடிவில் வெளியேறும் கழிவுநீரை ஆலை நிர்வாகம் அருகிலுள்ள விவசாயப் பாசனவாய்க்கால்களில் கலந்துவிடுகிறது. ஆனால், இந்தக் காகித ஆலையிலிருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த சுண்ணாம்பு பவுடரை பலரிடம் கான்ட்ராக்ட் விட்டு, ஆலை நிர்வாகம் அப்புறப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆலையிலிருந்து அந்த ரசாயனப் பவுடர் கழிவை அப்புறப்படுத்தும் ஒப்பந்ததாரர் தண்டபாணி, 'கழிவுகளை ஆலைக்கு அருகிலேயே கொட்டிவைத்தால் பிரச்னை வரும். வானம் பார்த்த பூமியான அரவக்குறிச்சி ஒன்றியத்தில் எங்கேனும் கொட்டி வைத்தால் பிரச்னை வராது' என்று கருதினார்.

 

 
 

இதுகுறித்து, ம.தி.மு.க. நிர்வாகி கலையரசன் நம்மிடம் விவரித்ததைப் பார்ப்போம். "காகித ஆலை ரசாயனக்கழிவைக் கொட்டிவைப்பதற்காக, அரவக்குறிச்சி ஒன்றியத்தின் தேரப்பட்டியில் உள்ள செடி,கொடிகள் மண்டிக் கிடந்த ஆறு ஏக்கர் நிலத்தை விவசாயி ஒருவரிடம், கான்ட்ராக்டர் தண்டபாணி பேசி வாங்கியிருக்கிறார். அந்த நிலத்தைச் சுத்தம்செய்து, பத்து லாரிகளில் காகித ஆலையிலிருந்து ரசாயனப் பவுடர் கழிவுகளை டன் கணக்கில் ஏற்றி வந்து, அதில் மலைபோல் கொட்டி வைத்தார். சுண்ணாம்புக் கழிவு வெளியில் தெரியாமல் இருக்க நிலத்தைச் சுற்றிலும் கொசுவலையைக் கொண்டு மறைத்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாக நினைத்த விவசாயிகள், கழிவின் அளவு அதிகமானதும் சந்தேகமடைந்தனர். அதோடு, சமீபத்தில் மழை பெய்ததால் இந்த ரசாயன பவுடர் பூமிக்குள் மழை நீரோடு கலந்து, அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் வயல்களில் போடப்பட்டுள்ள போர்களிலிருந்து ரசாயனம் கலந்த, கலர் மாறிய தண்ணீர் வந்திருக்கிறது. அதைக் குடித்த சில ஆடு, மாடுகள் இறந்திருக்கின்றன. 


 

மேலும் ரசாயனக் கழிவு பவுடர் காற்றில் பறந்து வந்து, விவசாயிகளின் முகத்தில் பட்டதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதி வானம் பார்த்த பூமின்னாலும் இந்த வருடம் நல்ல மழை பெய்து தேரப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல், கம்பு, சோளம் போன்ற பயிர்களெல்லாம் நல்லா விளைஞ்சுருக்கு. ஆனால், இந்த ரசாயனக்கழிவால் அந்தப் பயிர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டிருக்கு. இதையடுத்து கான்ட்ராக்டர் தண்டபாணிகிட்ட போய், 'என்னத்த கொட்டுறீங்க. எங்களுக்கு இதனால் பல பிரச்னைகள் வருதுன்னு' விவசாயிகள் கேட்டிருக்காங்க. ஆனால் அவரோ அவர்களை மிரட்டி அனுப்பியுள்ளார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும், நான் போய் அவரிடம் தட்டிக்கேட்டேன். முதல்ல என்கிட்ட மிரட்டலா பேசினார். உடனே, விவசாயிகளைத் திரட்டிக்கொண்டு கழிவுகள் கொட்ட வந்த லாரிகளைச் சிறை பிடிச்சோம். தகவல் கிடைச்சு போலீஸ், தாசில்தாரெல்லாம் வந்தாங்க. அவங்ககிட்டயும் தண்டபாணி ஆரம்பத்தில் பிடிகொடுத்துப் பேசலை. உடனே நாங்க அங்கேயே மறியல் பண்ண முயற்சி செய்தோம். ஆனால், 'மூணு நாள்ல 800 டன் கழிவையும் அப்புறப்படுத்தலேன்னா, நாங்களே அப்புறப்படுத்துவோம்ன்னு' சொன்னோம். 

பின்னர் கழிவுகளை அப்புறப்படுத்துறதா ஒப்புக்கிட்டார். தொடர்ந்து, அங்கிருந்து கழிவை அப்புறப்படுத்தத் தொடங்கிட்டாங்க. எப்படியோ பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களுக்குத் திடீர் எமனாக மாறவிருந்த 800 டன் காகித ஆலைக் கழிவை அப்புறப்படுத்த வெச்சுட்டோம். இனி விவசாயிகளே விழிப்புஉணர்வாக இருப்பார்கள்" என்றார்.

கலையரசனின் முயற்சியால் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டதற்காக, அவருக்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். 

கான்ட்ராக்டரானாலும், அரசு அதிகாரிகளானாலும், அவர்களுக்கும் சோறுபோடுவது விவசாயிகள்தான் என்பதை உணர்ந்து கொள்ளும் நாள் எப்போது வருமோ?


டிரெண்டிங் @ விகடன்