வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (08/12/2017)

கடைசி தொடர்பு:17:50 (08/12/2017)

மகா குருபூஜை விழா! - பக்தி பரவசத்தில் தஞ்சாவூர் வடவாற்றங்கரை சித்தர் ஆஸ்ரமம்

தஞ்சாவூர் வடவாற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியநாராயண கருவூர் சித்தர் ஆஸ்ரமத்தில் இன்று 42-ம் ஆண்டு மகாகுருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.  

``வடவாற்றங்கரை வாழும் வள்ளல் போற்றி... வந்தவர்தம் துயர் நீக்கும் சித்தர் போற்றி” எனப் புகழப்படும் ஸ்ரீசத்தியநாராயண கருவூர் சித்தர் சுவாமிகளை வழிபடக்கூடிய ஏராளமான பக்தர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இங்கு வருகை புரிந்துள்ளார்கள். கர்நாடகாவிலிருந்தும் இவரின் பக்தர்கள் இவ்விழாவுக்கு வந்துள்ளார்கள். இசைக்கலைஞர்கள் எம்.மகாதேவன் - டி.வி.தர்மராஜ் குழுவினரின் நாதஸ்வர இசை பார்வையாளர்களைப் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. ஓதுவார் ஜெகன்ராஜ் திருமுறை ஓதினார். பெரும் திருமஞ்சனம், பேரொளி வழிபாடும் நடைபெற்றது. தேவகோட்டை எஸ்.ராமநாதனின் ஆன்மிக உரை மற்றும் சுவாமி வேதாந்தா ஆனந்தா ஆச்சாரியாரின் அருளுரையும் நடைபெற்றது. வடவாற்றங்கரை வந்து இறையாற்றல் கரைகண்டு தொடராற்றல் சித்தியினால் துயராற்றும் பணிசெய்து படகோட்டும் துடுப்பாகப் பலருக்கு துணைநின்று இதமாக எண்ணற்றோர் இதயங்களில் உறைகின்ற ஸ்ரீ சத்தியநாராயண கருவூர் சித்தர் சுவாமிகள் என இவரின் பக்தர்கள் நெகிழ்கிறார்கள்.