'தமிழன் பிணத்தையாவது கொண்டுவந்து கொடுங்கள் எடப்பாடியாரே!' - முதல்வருக்குச் சீமானின் வேண்டுகோள்

சீமான்

கொந்தளித்துக் கிடக்கின்றன தமிழக மீனவ கிராமங்கள். தொடர் போராட்டம், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என அரசுக்கு எதிராகக் கொதிக்கின்றனர். ' ஒன்பது ஹெலிகாப்டர்களைக் கொண்டு தொலைந்துபோன மீனவர்களைத் தேடுகிறது கேரள அரசாங்கம். இங்கு தெருவுக்குத் தெரு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள். இப்படியொரு அரசை எங்குமே பார்த்ததில்லை' எனக் கொந்தளிக்கிறார் சீமான். 

ஒகி புயலின் பாதிப்பால் காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தரக் கோரி, கன்னியாகுமரி மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். கடலில் மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். புயலின் கோரத்தால் தொலைந்துபோன மீனவர்களின் படகுகள், குஜராத், கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் கரை ஒதுங்கியிருக்கிறது. இறந்து போன மீனவர்களின் உடல்களும் கேரளா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரை ஓரங்களில் ஒதுங்குகிறது. இதனால், மாயமான மீனவர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம், மீனவ மக்கள் மத்தியில் நிலவிவருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில் நீரோடி, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, புத்தன் துறை உள்பட 8 மீனவ கிராம மக்களும் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும்வரை போராட்டம் தொடரும்’, ‘தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், கேரள முதல்வரிடம் மனு கொடுப்போம்’ என்ற முழக்கங்கள் போராட்டக்களத்தில் எதிரொலித்தன. இதனையடுத்து, அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. 

மீனவர்களின் போராட்டம் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம். " மீனவர் விவகாரத்தை தமிழக அரசு மெத்தனமாக அணுகுகிறது. பேரிடர் மேலாண்மை என்ற ஒன்று இந்த நாட்டில் இல்லை. பேரிடரிலிருந்து மக்களைப் பாதுகாப்பதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். ' 1,384 பேரை மீட்டுவிட்டோம்' என முதல்வர் சொல்கிறார். ' அரசாங்கம் மீட்கவில்லை' என மக்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள். எது உண்மை, புயலால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவ மீனவ கிராமங்கள். அதனால்தான் இந்த அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நான் அங்கு சென்ற நேரத்தில், நமது இரண்டு மீனவர்களை மீட்டுக் கொடுத்தது கேரளா அரசு. மீட்புப் பணிக்காக ஒன்பது ஹெலிகாப்டர்களைக் களத்தில் இறக்கிவிட்டுள்ளது கேரள அரசு. இறந்த குடும்பங்களுக்கு 20 லட்ச ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மீனவர்கள் போராட்டம்

நமது முதல்வரோ நான்கு லட்ச ரூபாயை அறிவித்திருக்கிறார். இந்தப் பணமும் இறந்ததை உறுதி செய்த ஏழாண்டுகளுக்குப் பிறகுதான் கொடுக்கப்படுமாம். இது என்ன மாதிரியான நிவாரணம்? அதுவரையில் இறந்துபோன மீனவனின் குடும்பம் என்ன செய்யும்? லட்சத்தீவு, மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் கடல் பகுதியில் நமது மீனவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அவர்களை மீட்டுக் கொண்டு வருவதில் தமிழக முதல்வருக்கு என்ன பிரச்னை? எவ்வளவு நவீனம் வந்துவிட்டது? நம்மைக் கொல்வதற்குத்தான் அரசின் ரேடார் கருவிகள் பயன்படுகிறது. நம்மைப் பாதுகாப்பதற்கு ரேடாரைப் பயன்படுத்த மாட்டார்கள். மூன்று நாள்களுக்கும் மேலாக தத்தளித்து, நீந்தி வந்த மீனவர் சொல்கிறார். 'படகின் ஒரு பகுதியைப் பிடித்துக்கொண்டே தத்தளித்துக் கொண்டிருந்தோம்' என்கிறார். இரண்டாயிரம் உயிர் என்பது சும்மாவாக இருக்கிறது? தனியாகத் துண்டித்துவிடப்பட்ட தீவு போல தமிழக மீனவ கிராமங்கள் மாறிவிட்டன. அந்த வெறுப்பில்தான், 'எங்களை கேரளாவுடன் இணைத்துவிடுங்கள்' என மீனவ மக்கள் சொல்கின்றனர். 

எடப்பாடி பழனிசாமிஅவர்களுக்கு ஆதரவு கொடுத்துப் பேசும்போது, ' இன்று இந்த அரசு இப்படியிருக்கிறது. நாளை நாம் சிறப்பான அரசை அமைக்கும்போது இப்படிச் சொல்லும் நிலை ஏற்படாது' எனக் கூறினேன். மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது முதல் நிவாரணம் அளிப்பது வரையில் கேரள அரசு முழுவீச்சில் செயல்படுகிறது. இந்த அரசுதான் நமது மீனவ மக்களைக் கண்டுகொள்ளவில்லை. ஒரு வீட்டில் உள்ள இரண்டு ஆண்களும் பலியாகிவிட்டார்கள். அந்தக் குடும்பத்தின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இது எவ்வளவு பெரிய இழப்பு? பேராபத்து சூழும் வேளையில் அரசு நம் பக்கம் வரவில்லையென்றால், மக்களின் மனநிலை எப்படி இருக்கும்? ' தமிழக அரசு தங்களைக் கைவிட்டுவிட்டது' என்பதை உணரும்போது, 'கேரளாவுடன் இணைந்து கொள்கிறோம்' என்கிறார்கள். இது கோபத்தின் வெளிப்பாடு.

பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துவிட்டன. இதைச் சரிசெய்யாமல், மின்னணு பரிவர்த்தனை, பணமில்லாத பரிவர்த்தனை எனக் கிளம்புகிறார்கள். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு வாரமாக மின்சாரம் இல்லை. எங்கள் கட்சிப் பிள்ளைகள்தான் அவசரத் தொடர்புக்காக ஜெனரேட்டர் துணையோடு சில உதவிகளைச் செய்து கொடுத்தார்கள். இங்கு பெரும் பிரச்னையே, விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டதா? ஏன் நிராகரித்தார்கள் என்பதுதான். பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு யாருமே செல்வதில்லை. அதை ஒரு பொருட்டாகவே அரசு பார்க்கவில்லை. தமிழக அரசு மீட்டதாகச் சொல்லப்படும் 1,384 பேரில் ஒருவரைப் பேட்டி கொடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். எப்படியெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்பது தெரியவரும். மக்கள் பொய் பேசினால் குற்றம். அரசு பொய் பேசினால் அது அரசியல் என்றாகிவிட்டது. 

மக்களுக்காக நிறுவப்படும் அரசு, மக்களுக்காகச் செயல்படுவதில்லை. தேர்தல் வெற்றிக்குப் பிறகு மக்களுக்கும் அரசுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி வந்துவிடுகிறது. பாதிக்கப்பட்ட மீனவ மக்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று பார்ப்பதில் என்ன பிரச்னை? ' வாழை மரம் விழுந்தது; ரப்பர் மரம் போனது' என்ற செய்திகளைத்தான் சொல்கிறார்கள். மீனவர்கள் எவ்வளவு பேர் பலியானார்கள் என்பதற்கு முறையான கணக்கு இருக்கிறதா? அதுவே, கேரள முதல்வர் பினராயி விஜயனைப் பாருங்கள். மிகுந்த பொறுப்புடன் செயல்படுகிறார். ஏற்கெனவே, இத்தாலியக் கடற்படை வீரர்கள், கேரள மீனவரைச் சுட்டதற்கு உடனே கைது செய்தது அப்போதைய உம்மன் சாண்டி அரசு. நாடாளுமன்றம் வரையில் இந்த விவகாரம் சென்றது. தற்போது புயலில் பாதித்த மக்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்கிறார் பினராயி விஜயன். மீனவர்களை மீட்டுக்கொண்டு வரும் வேலையில் தீவிரம் காட்டுகிறார். ' புயலுக்குப் பிறகு மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்'  என்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். எவ்வளவு பொய்யான தகவல் இது? தெருவுக்குத் தெரு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள். ஒரு நூற்றாண்டு விழாவை ஒருமுறை கொண்டாடுங்கள். இங்கு எவ்வளவு பிரச்னை இருக்கிறது? அதைவிட்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு என்ற பெயரில் மக்கள் பணத்தை வாரியிறைப்பது எந்த வகையில் சரியானது? இது எம்.ஜி.ஆரைப் போற்றுவதுபோலத் தெரியவில்லை. இந்த அரசு மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருக்கிறார்கள். இரண்டாயிரம் உயிர்களைக் காணவில்லை. 'பிணத்தையாவது கொண்டு வந்து கொடுங்கள்' என மக்கள் கதறுகின்றனர். மக்களை ஓட்டாகத்தான் அரசு கருதுகிறது. ஓர் உயிராகக் கருதவில்லை. இப்படியோர் தேசத்தை நான் எங்கேயும் பார்த்ததில்லை" என்றார் கொதிப்புடன். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!