வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (08/12/2017)

கடைசி தொடர்பு:19:02 (08/12/2017)

பள்ளி மாணவனைத் தாக்கிய விடுதி சமையல்காரர்..! காவல்நிலையத்தில் பெற்றோர் புகார்

அரியலூர் மாவட்டத்தில் பன்னிரண்டாம் படிக்கும் மாணவனை விடுதி சமையல்காரர் கடுமையாகத் தாக்கியுள்ளார் என்று மாணவனின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

                          


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேவாமங்கலத்தைச் சேர்ந்த சஞ்சய் என்ற மாணவன் 12-ம் வகுப்பு படித்து வருகிறான். இவர் அருகில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கிப் பள்ளி சென்று வந்துள்ளான். இந்நிலையல் மாணவன் சஞ்சய் நேற்று வெளியில் சென்றுவிட்டு விடுதிக்கு வந்தபோது விடுதியின் சமையல்காரர் கருப்பையா கையெழுத்துப் போடாமல் வெளியில் எப்படி சென்றாய் எனக் கேட்டுள்ளார். அப்போது கையெழுத்துப் போட்டுவிட்டுதான் சென்றேன் என சஞ்சய் சொல்லியிருக்கிறான். 

 

                      


ஆத்திரமடைந்த சமையல்காரர் என்னையே எதிர்த்துப் பேசுறது மட்டுமல்லாமல் பொய் வேற சொல்றியானு சொல்லி கண்மூடித்தனமாக அடித்திருக்கிறார். இதில் சஞ்சய் பல் உடைந்தது மட்டுமல்லாமல் தலையில் பலத்த அடிபட்டிருக்கிறது. முகம் மற்றும் கை, கால்கள் வீங்கிய நிலையில் மயங்கியிருக்கிறான். அருகில் இருந்தவர்கள் மாணவன் சஞ்சயைச் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

                       

இது குறித்து சஞ்சய் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். மாணவர்களை வார்டன் கண்டிக்காமல் சமையல்காரர் எப்படிக் கேள்விகேட்டு அடிக்க முடியும். மாணவனைத் தாக்கிய சமையல்காரர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டும் பெற்றோர்கள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்திருக்கிறார்கள்.