வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (08/12/2017)

கடைசி தொடர்பு:19:34 (08/12/2017)

பூச்சிக்கொல்லி மருந்தைப் பாதுகாப்பாக அடியுங்கள்..! மாவட்ட ஆட்சியர் அறிவுரை

பாதுகாப்பான முறையில் பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும் வகையில் 300 விவசாயிகளுக்குப் பாதுகாப்பு உடைகள், மற்றும் உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார்.

                    


பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தபோது ஐந்து விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் விவசாயிகள் மருந்து அடிப்பதில் போதிய விழிப்பு உணர்வு இல்லாததால்தான் இறப்புச் சம்பவம் அரங்கேறியிருப்பதாகவும் அவர்களுக்குப் போதிய விழிப்பு உணர்வு அளிக்கப்படும் என்று ஆட்சியர் அறிக்கை வெளியிட்டிருந்தார். விவசாயிகள் பயிர்களுக்குப் பூச்சிமருந்து தெளிக்கும்போது பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் பருத்திப் பயிர்களில் பாதுகாப்பான முறையில் மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கான விழிப்பு உணர்வு முகாம் பெரம்பலூர் ரோவர் வேளாண்மை அறிவியல் மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 300 விவசாயிகளுக்குப் பூச்சிமருந்து தெளிக்கப் பாதுகாப்பு உடைகள், உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சாந்தா வழங்கினார்.

              

நிகழ்ச்சியில் ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சுதர்சன், வேளாண்மை அலுவலர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழிப்பு உணர்வு முகாமில் பாதுகாப்பான முறையில் வயல்வெளிகளில் மருந்து தெளிப்பது குறித்தும், மருந்து தெளிக்கும்போது விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுக்காப்பு நடைமுறைகள் குறித்தும் இக்கூட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.