வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (08/12/2017)

கடைசி தொடர்பு:22:30 (08/12/2017)

சேகர்ரெட்டி டைரி விவகாரம்- அமைச்சர்கள் பதவி விலகவேண்டும்..! ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை

சேகர் ரெட்டி

சேகர் ரெட்டியின் டைரியில் இடம்பெற்றுள்ளவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும் என்று சி.பி.எம் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், ”டைம்ஸ் நவ் என்கிற தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி, சேகர் ரெட்டியின் டைரியில் உள்ளவை என சில பக்கங்கங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பக்கங்களில் உள்ள குறிப்புகளில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கும், சில கட்சிகளின் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சேகர் ரெட்டியின் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அமைச்சர்களாக நீடிப்பதற்கு தார்மீக உரிமையற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். எனவே விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், வெளிவந்துள்ள டைரி பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்களை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். சேகர் ரெட்டி மீதான வழக்கு விசாரணையைத்  துரிதப்படுத்தவேண்டும்” என்று  ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.