வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (08/12/2017)

கடைசி தொடர்பு:23:30 (08/12/2017)

மாணவர்கள் மத்தியில் பாட்டுப் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் டி.எஸ்.பி..!

சாலை விதிமுறைகள் மீறுபவர்களை ஒருமையில் திட்டி அபராதம் விதித்து, வழக்கு போடும் காவல்துறையினர் மத்தியில் ஈரோடு டவுன் டிராஃபிக் டி.எஸ்.பி.,சேகர், ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று சாலை போக்குவரத்து விதிமுறைகளை பற்றிய பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்துவதோடு சாலை விழிப்புணர்வு பாடல்களை பாடி, மாணவர்களை குஷிப்படுத்துகிறார். பிறகு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இது மாணவர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவர் காவல்துறை அதிகாரி என்ற தோரணையில் இல்லாமல் அனைவரிடமும் நெருக்கமான தோழனாக பழகி சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு செய்து வருவதால் இவர் மீது ஈரோடு பொதுமக்களுக்கு அன்பும் அதிகரித்திருக்கிறது.

இதுப்பற்றி ஈரோடு டவுன் டிராஃபிக் டி.எஸ்.பி சேகரிடம் கேட்டதற்கு, ''இந்தியாவில் அதிகமாக சாலை விபத்து ஏற்படும் மாநிலங்களில் வரிசையில் மஹாராஸ்டிராவிற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான சாலை விபத்துகளில் மாணவர்களே உயிரிழந்து வருகிறார்கள். தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிப்பது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதும் எங்கள் பணியாக இருக்கிறது.

சாலை விதிமுறைகளை மீறி வருபவர்கள் மீது வழக்கு போடுவது ஒரு புறம் இருந்தாலும் விழிப்புணர்வு இல்லாமல் பலர் இருப்பதால்  நான், பிரதானமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முழுமையாக ஈடுபாடு காட்டினேன். அதையடுத்து பள்ளி, கல்லூரி, பொது இடங்கள், திருமண விழாக்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சாலை விதிகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

இதனால் மக்கள் மத்தியிலும், எங்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் மத்தியிலும் இந்த பிரச்சாரங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஈரோடு எஸ்.பி. சிவக்குமார் சார் எழுதிய ''எதுக்கு இந்த வேகம், ஏன் இந்த சோகம்'' என்ற பாடலையும் நான் எழுதிய ''மனிதா உனக்கு தேவை மதுவா!, மனித உயிரின் விலை மலிவா...'' என்ற பாடல்கள் பாடும் போது மாணவர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியைக் காண முடிகிறது.

மாணவர்கள் சட்டத்தை மதித்து குறிக்கோளோடு வாழ வேண்டும் என்ற நம்பிக்கை பிறப்பதையும் காண முடிகிறது. இதற்காக கடந்த 6 மாதத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் துண்டு பிரசுரங்களைக் கொடுத்து இருக்கிறேன். இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறேன். மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருவதால் ஈரோட்டில் சாலை விபத்துகள் குறைந்து இருப்பதை காண முடிகிறது'' என்றார்.