அடிப்படை வசதி இல்லாத கோபத்தில் ஊராட்சி செயலரை அறைக்குள் வைத்து பூட்டிய மக்கள்!

   

 

தங்கள் கிராமத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால் கோபமான திம்மம்பட்டி கிராம மக்கள் ஊராட்சி செயலாளரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பூட்டினர். அதோடு, வெளிவாசலிலும் முற்களை வெட்டி போட்டு, முற்றுகை போராட்டமும் நடத்தினர்.

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது இந்த திம்மம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட ரெத்தினம்பிள்ளைபுதூர் கிராம மக்கள் குடிநீர், சாலை, சுகாதாரம், லைட் என்று எந்த வசதிகளும் இல்லாமல் கடந்த சில வருடங்களாக அல்லாடி வந்தனர். பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம், இந்த மக்கள் தங்களது அடிப்படை வசதிகளை செய்து தரும்படி கோரிக்கை வைத்தும், எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில், குடிநீர் பிரச்னை இந்த ஊரில் தலைவிரித்தாட, கோபமான மக்கள் காலி குடங்களுடன் திம்மம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, 'இங்கு பிரச்னை செய்யக்கூடாது' என்று சொன்ன திம்மம்பட்டி ஊராட்சி பெண் செயலரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பூட்டினர் மக்கள். அதோடு, அலுவலகத்தின் கதவு அருகே கருவேலமர முற்களை வெட்டி போட்டு, 'உயரதிகாரிகள் வந்து எங்க கோரிக்கையை தீர்த்தாதான், ஊராட்சி செயலரை விடுவிப்போம்' என்று ஒற்றைக்காலில் நின்றனர்.

இந்நிலையில், விஷயம் தெரிந்து ஸ்பாட்டுக்கு வந்த குளித்தலை இன்ஸ்பெக்டர், குளித்தலை வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய அதிகாரிகள், மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். 'விரைவில் உங்க பிரச்னைகளை தீர்த்து வைக்கிறோம். தயவுசெய்து ஊராட்சி செயலரை திறந்து விடுங்க' என்று கெஞ்ச, அரை மனதோடு சாவியை கொடுத்தனர். பிறகு, பூட்டு திறக்கப்பட்டு செயலர் வெளியேற்றப்பட்டார். அதோடு, வாசலில் மக்கள் போட்டிருந்த முற்களையும் அப்புறப்படுத்தினர்.
 இந்நிலையில், நம்மிடம் பேசி அந்த பகுதி மக்கள், "அதிகாரிகள் சொன்னப்படி இன்னும் மூணு நாள்ல எங்க பிரச்னை முடியலன்னா, அந்த அதிகாரிகளை அவங்க அலுவலகத்தில் வைத்து பூட்டுவோம். நாங்களும் எவ்வளவுதான் பொறுக்குறது?!" என்று வெடிக்கிறார்கள். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!