புதுச்சேரி நகராட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்; வைப்பு நிதி ஆணையம் அதிரடி

வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகை தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காததால் புதுச்சேரி நகராட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது.

நகராட்சி

இதுகுறித்து வைப்பு நிதி ஆணையத்தின் பிராந்திய ஆணையர் எஸ்.கே.மஞ்சுநாத் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 8.1.2011-ம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் நகராட்சிகளும், சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி அங்கு பணிபுரியும் தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் (நிரந்தர ஊழியர்களுக்கு ஈடாக எந்த சலுகையும் பெறாதவர்கள்) உள்ளிட்டவர்களுக்கும் வைப்பு நிதி செலுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த சட்டத்தை புதுச்சேரி நகராட்சி மீறியுள்ளது. வைப்பு நிதிச் சட்டத்தில் இருந்து விலக்கு கேட்ட புதுச்சேரி நகராட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புதுச்சேரி நகராட்சியின் நிலுவை தொகைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் விசாரணை சுமூகமாக நடைபெறுவதற்கு நகராட்சி நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை. சென்னை உயர்நீதிமன்றமும் நகராட்சி நிர்வாகங்கள் உரிய ஆவணங்களுடன் விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் விசாரணையிலும் பங்கேற்காமல், உரிய ஆவணங்களையும் வெளியிடாத காரணத்தால் புதுச்சேரி நகராட்சியின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்படுகின்றன. விசாரணைக்கு ஒத்துழைக்கவும், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் வேண்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!