வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (09/12/2017)

கடைசி தொடர்பு:05:15 (09/12/2017)

"இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை" - திருமாவளவன் மறுப்பு

"ராமர் கோயில் இருந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே, அதை இடித்து விட்டு அங்கே மீண்டும் இராமர் கோயிலை கட்டப்போகிறோம் என வகுப்புவாதிகள் பேசி வருகின்றனர். இந்த வாதம் சரியென்றால் பௌத்த, சமண கோயில்களை இடித்து அந்த இடங்களில்தான் சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும் கட்டப்பட்டுள்ளன. அங்கே மீண்டும் பௌத்த விகார்களை கட்டுவோம் என கூறமுடியுமா? இந்த கேள்வியைத்தான் நான் எழுப்பினேன். அதைத்தான் திரித்து வெளியிட்டு இருக்கிறார்கள்"  என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "டிசம்பர் 6-ம் தேதியை ‘தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சி நாள்’ என ஒவ்வொரு ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடைபிடித்து வருகிறோம். இந்த ஆண்டு அதையொட்டிய பொதுக்கூட்டம் சென்னையில் ஜமாலியா என்னும் இடத்தில் நடைபெற்றது. நான் பேசியதில் முன்னே இருந்த பகுதியையும் பின்னால் இருந்த பகுதியையும் வெட்டிவிட்டு இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என்று நான் கூறியதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பி உள்ளனர். இது என் மீதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கலங்கம் சுமத்தும் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். நான் பேசியதன் முழுவடிவம் வெளிச்சம் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. FX16 தொலைகாட்சியிலும் எனது விளக்கம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் என்னை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் அவதூறு செய்யும் விதமாக வகுப்புவாத சக்திகள் பேசி வருகின்றன. அவர்களுடைய கூட்டுச்சதியின் காரணமாகத்தான் எனது பேச்சு வெட்டிசிதைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டதோ என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.

காஞ்சி காமாட்சி கோயில் என்பது முன்னர் தாராதேவி கோயிலாக இருந்தது என்றும் திருப்பதி எழுமலையான் கோயில் முன்னர் புத்தர் கோவிலாக இருந்தது என்றும் வராலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதுபோலவே தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களிலும் பௌத்த அடையாளங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர். இந்த செய்திகளின் அடிப்படையிலேயே எனது கேள்வியை நான் எழுப்பினேன்.

இப்போது கோயில்கள் இருக்கும் இடத்தில் மீண்டும் பௌத்த விகார்களை கட்ட வேண்டும் என்று சொல்வது எப்படி பொருத்தமற்ற வாதமோ அப்படித்தான் பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கே ராமர் கோயில் கட்டவேண்டும் என்று சொல்வதும் ஆகும். இதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். எனது பேச்சை திரித்து அரசியல் லாபம் தேட வகுப்புவாதிகள் முற்படுவது தமிழ்நாட்டை எப்படியாவது ஒரு வன்முறை களமாக மாற்றிவிட வேண்டும் என்ற அவர்களுடைய நோக்கத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. பொய்களின் மூலமாகவும் அவதூறுகள் வாயிலாகவும் அரசியல் லாபம் தேட முயற்சிக்கும் வகுப்புவாத சக்திகள் இனியாவது தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

நீங்க எப்படி பீல் பண்றீங்க