”எங்களுக்கு கொசுவென்றால் என்னவென்றே தெரியாது ஆனால் இப்போ..!” - தேனி மலை கிராமத்திலிருந்து ஒரு குரல் | dengue affected tribal village of theni and government shows no concern

வெளியிடப்பட்ட நேரம்: 09:27 (09/12/2017)

கடைசி தொடர்பு:09:27 (09/12/2017)

”எங்களுக்கு கொசுவென்றால் என்னவென்றே தெரியாது ஆனால் இப்போ..!” - தேனி மலை கிராமத்திலிருந்து ஒரு குரல்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மலை கிராமம் குரங்கணி. இயற்கை எழில்சூழ் கிராமமான குரங்கணி, கொட்டக்குடி ஊராட்சிக்கு கீழ் இருக்கும் கிராமம். கொழுக்குமலை, டாப்ஸ்டேஷன், சாலைப்பாறை, காரிப்பட்டி, ராசிமலை, முதுவாகுடி போன்ற மலை கிராமங்களும் கொட்டக்குடி ஊராட்சியின் கீழ் உள்ள கிராமங்களாகும். இவை அனைத்திலும் டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், பலர் காய்ச்சல் காரணமாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நமக்கு தகவல் கிடைக்க, கள நிலவரத்தை அறிந்துகொள்ள, நேரடியாக மலைகிராமங்களுக்குச் சென்றோம்.

குரங்கணி பகுதியில் நம்மிடம் பேசிய மணிகண்டன், ``கொட்டக்குடி ஊராட்சிக்கு கீழ் இருக்கும் அனைத்து மலைகிராமங்களையும் தற்போது டெங்கு காய்ச்சல் பாதித்திருக்கிறது. டெங்கு பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. எங்கள் மலை கிராமங்களில் கொசுவே இருக்காது. ஆனால் இன்று ஊரே டெங்கு காய்ச்சலால் படுத்துக்கிடக்கிறோம்.

குரங்கணியில் மட்டும் 150 குடும்பங்கள் இருக்கிறது. இந்த ஒருவாரத்தில் மட்டும் 12 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அதில் 8 பேருக்கு டெங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அங்கேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருகிறார்கள். இது இந்த வார நிலவரம் மட்டும் தான். கடந்த ஒரு மாதமாகவே இதே நிலை தான். என் மகன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஒரு வாரம் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் இன்று தான் வீட்டிற்கு அழைத்துவந்தேன். இதுவரை எங்கள் பகுதிக்கு எந்த அதிகாரிகளும் வந்ததில்லை. இனியும் வருவார்கள் என்று நம்பிக்கையும் இல்லை.`` என்று ஆதங்கப்பட்டார் மணிகண்டன்.

குரங்கணியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று இருக்கிறது. ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சில நாள் வருவதும், பல நாள் வராமலும் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். போதிய மருத்துவ வசதி இல்லாததால், `குறைந்தபட்ச மருத்துவ வசதியாவது செய்து கொடுங்கள்…` என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், தற்போது ஒரு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் குரங்கணியில் கட்டப்பட்டிருக்கிறது.

மூன்று மாதத்துக்கு முன்பே பணிகள் நிறைவடைந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்றுவரை திறக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது மாவட்ட நிர்வாகம். இதனால் இவர்கள் 17 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் போடி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. போடி மருத்துவமனையிலும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் செல்ல போடி மருத்துவமனையில் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால், 40 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் தேனிக்குச் சென்று மருத்துவம் பார்க்க வேண்டிய சூழலில் சிக்கித்தவிக்கிறார்கள் இந்த மலைகிராம மக்கள்.

சென்ட்ரல் ஸ்டேஷன் என்ற மலைகிராமப் பகுதியைச் சேர்ந்த முத்துப்பேச்சியிடம் பேசினோம். ``எங்க பாத்தாலும் காய்ச்சலா இருக்கு. தினமும் கூலி வேலைக்கு போனா தான் கஞ்சி குடிக்க முடியும். இந்த காய்ச்சல் வந்து எங்களை பாடாய் படுத்துது. எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இப்படி ஒரு காய்ச்சலை நான் பார்த்ததில்லை. சின்ன பிள்ளை முதல் பெரியவுங்க வரை படுத்த படுக்கையா கிடக்க வைக்குது. ஏதோ டெங்கு காய்ச்சல்னு சொல்றாங்க. இதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் இந்த மலையும் மக்களும் தான். காய்ச்சல் வந்தா ஆஸ்பத்திரிக்கு வர  எங்களுக்காவது நடக்க பாதை இருக்கு. அதோ பாருங்க அந்த மலை. அதுக்கு பின்னால ஒரு கூட்டம் இருக்கு. ஊரு பேரு முதுவாகுடி. அங்க இருக்க சனங்களுக்கும் டெங்கு காய்ச்சல் வந்திருக்கு. நடக்க முடியாத தூரம் அது. குளிரில் மலையில் காய்ச்சலோட அந்த சனம் கிடக்குது.`` என்று நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே வானத்தை பார்த்து ``அவுங்கள காப்பாத்து சாமி…`` என்று சொல்லிவிட்டு கண்களை துடைத்துக்கொண்டு நகர்ந்தார்.

மேகங்கள் சூழ அழகியலாக கண் முன்னே குரங்கணி மலை தெரிந்தது. ஆனால், அதற்குள் ஒரு பழங்குடியின கிராமம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ வசதிகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதை நினைக்கும் போதே நம் கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது.


டிரெண்டிங் @ விகடன்