வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (09/12/2017)

கடைசி தொடர்பு:12:15 (09/12/2017)

'தினமும் 20 லாரிகள்மூலம் உறிஞ்சப்படும் தண்ணீர்'- ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகக் கொதிக்கும் மக்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பழையபாளையத்தில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான கிணறு அமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்குத் தேவையான தண்ணீர் எடுக்க, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் லாரியைச் சிறைப்பிடித்தார்கள்.

ஓ.என்.ஜி.சி நிறுவனம் பழையபாளையத்தில் மேற்கொண்டுள்ள துளையிடும் பணிக்குத் தேவையான தண்ணீரை, இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பச்சைப்பெருமாள்நல்லூர் கிராமத்திலிருந்து லாரிமூலம் கொண்டுவருகிறது. இங்குள்ள தனியாருக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தினமும் 20 லாரிகள் தண்ணீர் எடுக்கிறது. ஏற்கெனவே, இப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாகக் குறைந்துகொண்டேவருகிறது. அதிக ஆழத்தில் தண்ணீர் கிடைப்பதால், ரசாயனத் தன்மையுடன் காவி நிறத்தில் உள்ளது. இந்நிலையில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் அதிகளவில் தொடர்ச்சியாக தண்ணீர் எடுத்தால், மிகவும் மோசமான நிலை ஏற்படும் என இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகும். ஆனால், நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஓ.என்.ஜி.சி தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.