'மாநில சுயாட்சித் தத்துவத்துக்கு எதிரானது'- ஆளுநரை குற்றம்சாட்டும் நல்லகண்ணு

nallakannu press meet

”தமிழக ஆளுநர், மாநில அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பொது மக்களிடம் மனுக்களைப் பெறுவதும், குப்பைகளை  அகற்றுவதும் மாநில சுயாட்சித் தத்துவத்துக்கு எதிரான செயல்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, “கனமழையாலும், ஒகி புயலின் தாக்குதலினாலும் கன்னியாகுமரி மாவட்டம் முழுமையாகவும்,  நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை, தென்னை, நெற் பயிர்கள், ரப்பர் மரங்கள் ஆகியவை புயல் காற்றில் சரிந்துள்ளதால், விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். புயல்குறித்த எச்சரிக்கை அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் முறையாகத் தெரிவித்திருந்தால், இத்தனை மீனவர்கள் கடலுக்குள் சென்றிருக்க மாட்டார்கள். எங்களுக்கு முறையான அறிவிப்பை அரசுத் தரப்பு வழங்கவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒகி புயல் தாக்குதல் முடிந்து 10 நாள்களுக்கு மேல் ஆகியும் கடலில் மாயமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களைத் தேடும் பணியில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. ஆனால், கேரள அரசு இப்புயல் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீட்டுத் தொகை அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு  மீனவர்களின் குடும்பத்துக்கு போதுமான உதவிகளைச் செய்யாமலும், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களைப் பார்க்காமல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றிபெறச்செய்வது எப்படி என்ற யோசனையின் அடிப்படையிலும் செயல்பட்டுவருகிறது.

தமிழக அமைச்சர்களும் அரசுப் பணியைப் பார்க்காமல் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தில் வீடுவிடாகச் சென்று ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒகி புயல் பாதித்த கன்னியாகுமரி பகுதியைப் பேரிடர்பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும். கடலுக்குச் சென்ற மீனவர்களில் காணாமல் போன மீனவர்கள்குறித்து அரசு தெளிவான அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். தமிழக ஆளுநர், மாநில அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பொது மக்களிடம் மனுக்களைப் பெறுவதும், குப்பைகளை  அகற்றுவதும் மாநில சுயாட்சித் தத்துவத்துக்கு எதிரான செயலாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிகாரிமீது நம்பிக்கைத்தன்மை இல்லை. அவரது  நடவடிக்கை ஆளும்கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தை செயல்படுத்த முயற்சிப்பதுபோல உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷின் வெற்றி உறுதி. விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத்தொகை முழுமையாக வழங்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதிசெய்ய அரசு ஊக்குவிக்க வேண்டும்.” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!