வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (09/12/2017)

கடைசி தொடர்பு:14:20 (09/12/2017)

அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: :குற்றாலத்தில் 2-வது நாளாக குளிக்கத் தடை!

 குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அருவியில் வெள்ளம்

நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள செங்கோட்டை, புளியரை, குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது.  இதனால், மேற்குத்தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர்  அதிகரித்துவருகிறது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தின் அணைகளில் தண்ணீர் அதிகரித்துவருகிறது. மாவட்டத்தில் உள்ள  11 அணைகளும் நிறையும் நிலையில் இருக்கின்றன. 

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடந்து மழை பெய்துவருகிறது. இதனால், குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் அதிகமாகக் கொட்டத் தொடங்கியுள்ளது. கடந்த இரு தினங்களாகப் பெய்யும் மழையால், குற்றாலத்தின் பிரதான அருவியில், பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் விழுகிறது. அதனால், இரண்டாவது நாளாக இன்றும் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மெயின் அருவியில் மட்டும் அல்லாமல், ஐந்தருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதனால், ஐந்தருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் நிரம்பிவருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.