ரூ.1,600 கோடியை 10 நாளில் வழங்காவிட்டால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முற்றுகை! விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை | Sugarcane farmers warns tamilnadu government

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (09/12/2017)

கடைசி தொடர்பு:19:00 (09/12/2017)

ரூ.1,600 கோடியை 10 நாளில் வழங்காவிட்டால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முற்றுகை! விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

கரும்பு விவசாயிகள்

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் கொடுக்கவேண்டிய 1,600 கோடி ரூபாய் பாக்கியை 10 நாள்களுக்குள் தராவிட்டால், சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராடுவோம் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2017-18-ம் ஆண்டுக்கான கரும்பு அரைக்கும் பணியை கலெக்டர் வீரராகவ ராவ் இன்று தொடங்கிவைத்துப் பேசுகையில், "இந்த வருடம் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து இந்தப் பருவத்துக்கு மட்டும் 50 ஆயிரம் டன் கரும்பு, அரவைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. கரும்பு, டன்னுக்கு 2,550 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  சென்ற வருடம், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த கரும்பு 1.74 லட்சம் டன்கள் அரைக்கப்பட்டது" என்றார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம்,
 "விவசாயிகளுக்கு, கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாய் வழங்க வேண்டும். ஏற்கெனவே, தமிழகம் முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு அளிக்கவேண்டிய பாக்கித்தொகை 1,600 கோடியை 10 நாள்களுக்குள் தர வேண்டும். மத்திய அரசின் வருவாய் பங்கீட்டுக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடத்துவோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க