மருத்துவ சீட் முறைகேடு விவகாரம்; புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிபிஐ ரெய்டு

புதுச்சேரி மருத்துவ சீட் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் இன்று இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுரியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிபிஐ

புதுச்சேரியில் 4 நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், 3 சுயநிதிக் கல்லூரிகள் என 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து பெறப்படும் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் ’சென்டாக்’ (Centralised Admission Comittee) கலந்தாய்வு மூலமே நிரப்பப்படும். ஒவ்வொரு ஆண்டும் ‘சென்டாக்கில் முறைகேடு நடக்கிறது’ என்று மாணவர்களும் பெற்றோர்களும் எவ்வளவு கதறினாலும் ஆட்சியாளர்கள் அதைக் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். இந்த வருடம் முதல் தனியார் கல்லூரிகளில் இருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50% அரசு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மொத்தம் உள்ள 318 இடங்களில் 159 இடங்கள் அரசு ஒதுக்கீடாகக் கிடைத்தது.

அந்த இடங்களை நிரப்பும்போதுதான் முறைகேடுகள் கசிய ஆரம்பித்தது. கட்டணத் தொகை குறைவு என்பதால் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை தனியார் கல்லூரிகள் சேர்க்க மறுத்தன. மாறாக ’நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற ஆனால் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படாத மாணவர்களிடம் 50 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு அவர்களை சேர்த்துக் கொண்டன. தனியார் கல்லூரிகளின் தந்திரத்தை கண்டுபிடித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரசு ஒதுக்கீட்டு இடங்களை தனியாருக்கு தாரை வார்த்து ’சென்டாக்’ முறைகேடு செய்திருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியதோடு சிபிஐ விசாரணையையும் கோரினார். அதையடுத்து அதிரடியாகக் களம் இறங்கிய சிபிஐ சென்டாக்கில் ரெய்டு நடத்தியது.

அதையடுத்து சென்டாக் குழுவின் தலைவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான நரேந்திரக் குமார், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன், சுகாதாரத்துறை செயலர் டாக்டர் பி.ஆர்.பாபு, சென்டாக் கன்வீனர் டாக்டர் கோவிந்தராஜ், சென்டாக் துணை கன்வீனர் டாக்டர் பழனிராஜா, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜோனாதன் டேனியல் மற்றும் 7 தனியார் கல்லூரிகளின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதேபோல ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தனியார் கல்லூரிகளில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 95 முதுநிலை மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்தது எம்.சி.ஐ. இதற்கிடையில் சுகாதாரத்துறை இயக்குநர் ராமன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாபு, சென்டாக் அமைப்பாளர் கோவிந்தராஜ், இணை அமைப்பாளர் பழனிராஜா, ஒருங்கிணைப்பாளர் ஜோனாதன் உள்ளிட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்து பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து விடுதலையடைந்தனர்.

சென்டாக் அமைப்பாளர் கோவிந்தராஜ்தான் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியின் இயக்குநராகவும் பதவி வகித்து வருகிறார். அதனடிப்படையில் இன்று கதிர்காமத்தில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிக்குள் அதிரடியாக நுழைந்த 6 பேர் கொண்ட சிபிஐ குழு இயக்குநர் கோவிந்தராஜின் அறைக்குள் சென்றது. அங்கிருந்த ஆவணங்களைக் கைப்பற்றி சோதனை செய்து கொண்டிருக்கும் அவர்கள் கோவிந்தராஜிடமும் தீவிரமாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!