வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (10/12/2017)

கடைசி தொடர்பு:16:37 (10/12/2017)

கோவை தெருக்களில் சுற்றிய ஆந்திர பெண்... கைக்குழந்தையுடன் வந்து மீட்ட கணவன்!

கோவை பகுதியில் செப்டம்பர் மாதம் இளவயது பெண் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்தார். மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். ரோட்டில் கிடந்த அவரை மீட்ட காவல்துறையினர், `ஈரநெஞ்சம்’ அறக்கட்டளையிடம் ஒப்படைத்தனர். அவர், காரமடை அருகிலுள்ள கருணை இல்லத்தில் பராமரிக்கப்பட்டார்.  மனநிலை பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணால், வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலையில், கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வந்தது. 10 நாள்கள் கழித்து மெல்ல வாய் திறந்தார். தன் பெயர் சசிகலா என்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். கணவரின் தொலைபேசி எண்ணையும் அவரால் சொல்ல முடிந்தது.

மனநிலை பாதிப்பில் இருந்து மீண்ட பெண்

இதுதான் சசிகலா பற்றி கிடைத்த முதல் க்ளு. அந்த எண்ணைத் தொடர்புகொண்டு விசாரித்தனர். எதிர்முனையில்  பேசியவர் பெயர்  ஜானகிராமன் என்பதும், அவர் விஜயவாடாவில் வசிப்பதும் தெரியவந்தது. அவரிடம் சசிகலா பற்றிய விவரத்தைச் சொன்னதும் அவர்  கதறினார்.  'அவர் என் மனைவிதான். திடீரென காணாமல் போய்விட்டார். கைக்குழந்தை என்னிடம் பரிதவித்தபடி இருக்கிறது' என்று துடித்தார். 'தமிழ்நட்டில் கொஞ்ச நாள் வேலைப் பார்த்துள்ளேன். அதனால், எனக்குத் தமிழ் தெரியும். 24 மணி நேரத்தில் கோவையில் இருப்பேன். நான் வரும்வரை, என் மனைவியைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்' என்றபடி போனில் பதறினார்.

கோவைக்கு வருவதற்குள் ஈரநெஞ்ச அமைப்பைச் சேர்ந்த மகேந்திரனுக்கு 24 முறை போன் செய்து விட்டார் ஜானகிராமன்.  கைக்குழந்தையுடன் வந்த அவரை, மின்னல்வேகத்தில் சசிகலா முன் கொண்டு நிறுத்தினர். மனைவியின் நிலையை கண்ட ஜானகிராமன் தலையில் அடித்துக் கொண்டு அழுதார். பின்னர், மனைவியின்  மடியில் தலையை வைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினார். மனநிலை பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு கணவரையும் குழந்தையையும் அடையாளம் தெரியவில்லை.

கதறியழுத ஜானகிராமன், 'நான்தான் சசி உன்னோட ஜானு வந்துருக்கேன்... என்னைப் பாரு சசி ' என்று முகத்தை தூக்கி கொஞ்சினார். 'நம்ம குழந்தையைப் பாரு சசி... நீ இல்லாம எப்படி இருக்கானு பாரு' என்று கண்ணீர் விட, அவரின் கண்ணீர் சசிகலாவின் மடியை நனைத்தது.  குழந்தையின் அழுகையும் காதுக்குள் புகுந்து சசிகலாவின் மூளையை துளைத்தெடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக சசிகலாவுக்கு நினைவு திரும்பியது. சட்டென்று குழந்தையை அள்ளி மடியில் வைத்துக் கொஞ்ச ஆரம்பித்தார். தாய்ப்பாலும் கொடுத்தார். சுற்றியிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. இதுபோன்ற காட்சிகளை சினிமாவில்தான் பார்த்திருப்போம்.ஆனால், இங்கே நிஜத்தில் அரங்கேறியது. 

மனநிலை பாதிப்பில் இருந்து மீண்ட பெண்

கருணை இல்லத்தில் இருந்தவரை சசிகலாவை சாப்பிட வைக்க, அங்கிருந்தவர்கள் படாதபாடுபட்டனர். இந்த விஷயத்தையும் அங்கிருந்தவர்கள் ஜானகிராமனிடம் கூறி, சசிகலாவுக்கு சாப்பாடு ஊட்டச் சொன்னார்கள்.  தட்டில் கொஞ்சம் சாப்பாடு பிசைந்து, மனைவிக்கு ஊட்ட ஆரம்பித்தார். முதலில், மறுத்தவர் கணவரின் கெஞ்சலுக்கிடையே உணவு சாப்பிடத் தொடங்கினார். புத்தி பேதலித்த மனைவி மீது ஜானகிராமன் வைத்திருந்த அன்பு  சுற்றியிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.  

போலீஸ் துறையில் சில சம்பிரதாயங்களை முடித்துவிட்டு ஜானகிராமன், மனைவியை சொந்த ஊரான தடா அருகேயுள்ள வரதாபாளையத்துக்கு அழைத்துச் சென்றார்.  கருணை இல்லத்தைச் சேர்ந்த மகேந்திரன் உள்ளிட்டவர்கள்,  கோவை ரயில் நிலையத்தில் அவர்களை வழியனுப்பி வைத்தனர். ஊர் சென்றதும், தாங்கள் நல்லபடியாக வந்து சேர்ந்தாக மகேந்திரனிடம் தெரிவித்தார் ஜானகிராமன். 

ஜானகிராமனைத் தொடர்பு கொண்டு நாமும் பேசினோம், ''சார்...  கதிர் அறுக்குற வேலை பார்க்குறேன். ஊர் ஊரா போகணும். குழந்தை பிறந்ததுல இருந்தே என் மனைவி கொஞ்சம் ஒரு மாதிரியாகவே இருந்தாங்க. ஒருநாள் சாப்பிடாம இருந்தாங்கனு நான் போன்ல திட்டினேன். அந்த கோபத்துல போய்ட்டாங்க. ஆந்திரால எல்லா இடத்துலயும் தேடினேன். விஜயவாடாவில் இருந்தப்போதான் கோவைல இருந்து போன் வந்துச்சு. இப்போ நல்லாருக்காங்க சார். என்னை மனைவியை மீட்டுக் கொடுத்தவங்களை வாழ்க்கைக்கும் மறக்கமாட்டேன் சார்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்