திருமாவளவன் தலைக்கு 1 கோடி பரிசு அறிவித்த நபர் திருப்பூரில் கைது! - 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

ஆ

திருமாவளவன் தலைக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்த இந்து அமைப்பைச் சேர்ந்த நபர் இன்று திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "இந்துக்களின் கோயில்களை இடிக்க வேண்டும்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக்கூறி, தமிழகம் முழுவதும் அவரைக் கண்டித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தான் அப்படி கூறவில்லை என்றும். தன் பேச்சை திரித்து அரசியல் லாபம் தேட வகுப்புவாதிகள் முற்படுவதாகவும் திருமாவளவன் விளக்கம் அளித்தார். 

இந்நிலையில் நேற்று திருப்பூரில் குமரன் நினைவகம் முன்பாக இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த நபர்கள் திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திருமாவளவனின் உருவ படத்தை கிழித்தும், அவரது உருவ பொம்மைக்கு தீ வைக்கவும் முயற்சித்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் கோபிநாத், " இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என்று பேசிய திருமாவளவனின் தலையை வெட்டி கொண்டுவரும் நபருக்கு எங்களது அமைப்பு சார்பாக ரூபாய் 1 கோடி பரிசு அளிக்கப்படும்" என்று அறிவித்தார். இவரது பேச்சு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்றைய தினம் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் முன்பாக கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கோபிநாத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றுகூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் தமிழ் வேந்தன் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், பின்னர் இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!