வெளியிடப்பட்ட நேரம்: 22:47 (09/12/2017)

கடைசி தொடர்பு:04:42 (10/12/2017)

சென்னை அழைத்துவரப்பட்டார் தஷ்வந்த்: 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளார்!

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் மும்பை தப்பிச்சென்ற சென்னை வாலிபர் தஷ்வந்தைப் போலீஸார் மீண்டும் கைது செய்து சென்னை அழைத்துவந்தனர்.

சென்னை விமானநிலையத்தில் தஷ்வந்த்

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த சிறுமி ஹாசினியை, தஷ்வந்த் என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தார். இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் ஜாமீன் வழங்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தஷ்வந்த் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்துசெய்ததோடு, ஜாமீனும் வழங்கியது.

இதையடுத்து, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தஷ்வந்த், சென்னை மாங்காட்டை அடுத்த குன்றத்தூரில், குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இதனிடையே, தாய் சரளாவைக் கொலைசெய்த தஷ்வந்த், அவர் வைத்திருந்த நகைகளையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு கடந்த 2-ம் தேதி மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தஷ்வந்தைத் தேடிவந்தனர். இதனிடையே, மும்பையில் இருப்பதாகத் தகவல் வரவே, அங்கு விரைந்தது தனிப்படை போலீஸ். தஷ்வந்த் தலைமறைவாக இருந்த இடத்தைக் கண்டுபிடித்த காவல் துறையினர், அவரைக் கைது செய்தனர். சென்னை கொண்டுவர மும்பை விமான நிலையத்துக்கு வந்தபோது, போலீஸ் பிடியிலிருந்து தப்பினார். அவரைத் தேடிவந்த நிலையில், அந்தேரியில் பதுங்கியிருந்த தஷ்வந்தை மீண்டும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

சென்னை விமானநிலையத்தில் தஷ்வந்த்

இதையடுத்து, மும்பை நீதிமன்றத்தில் தஷ்வந்தைக் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, காவலில் எடுத்து விசாரிக்கக் காவல் துறையினர் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, அவரை இரண்டு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு, போலீஸ் காவல் முடிந்ததும் டிசம்பர் 12-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து, தஷ்வந்த் இன்றிரவு சென்னை அழைத்துவரப்பட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க