வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (10/12/2017)

கடைசி தொடர்பு:15:35 (10/12/2017)

மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையா? - பீதியைக் கிளப்பிய விளம்பர போஸ்டர்!

உங்களின் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை 50 ரூபாயாக மாற்றிக்கொள்ளுங்கள் என கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி பொதுமக்களை பீதி அடைய வைத்துவிட்டது. காரணம் கடந்த ஆண்டு நாடு முழுவதும் கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிய 500, 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டார். 

உங்களின் 500

அதே மாதிரி இந்த ஆண்டும் ரூபாய் நோட்டுகளில் சீர்திருத்தம் செய்கிறேன் என்று 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெற முடிவு எடுத்துவிட்டதா? என்று பொதுமக்கள் ரொம்பவே குழம்பிவிட்டனர். காரணம் போஸ்டரில் அச்சகத்தின் பெயரும், போஸ்டரை வெளியிட்டவர் குறித்த தகவலும் இல்லாததால் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போஸ்டர் வாட்ஸ் ஆப்-பில் பரவி பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி 500, 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 50 ரூபாய் நோட்டுகளாக மாற்ற பெட்ரோல் பங்க், மளிகைக் கடை என்று பொதுமக்கள் அலைந்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்திவிட்டனர். 

பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதை லேட்டாக கவனித்த காவல்துறை போஸ்டர் குறித்த முழு தகவல் கிடைக்காமல் தடுமாறிவிட்டனர்., நேற்று இரவு முழுதும் யாராவது போஸ்டர் ஒட்டுறாங்களா? என்று கண்விழித்தபோது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் தீபா சில்க்ஸ் துணிக்கடை புதியதாக திறப்பு விழா செய்கிறோம். அதற்காக வித்தியாசமாக விளம்பர போஸ்டர் அடித்துப் பரபரப்பாக்க இப்படி அடித்துவிட்டோம் என்று தீபா சில்க்ஸ் உரிமையாளர் கூறவும் கடுப்பான போலீசார் உரிமையாளரைக் கடுமையாக எச்சரித்ததுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களை மீண்டும் கிழித்து எடுக்க வைத்துள்ளனர். எப்படி எல்லாம் பீதியை கிளப்புறாங்க.. தாங்க முடியல என்று கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளனர்.