வெளியிடப்பட்ட நேரம்: 01:58 (11/12/2017)

கடைசி தொடர்பு:15:22 (09/07/2018)

டயர் ஏம்பா இவ்வளவு தேஞ்சு இருக்கு, எனக்கேட்டு போலீஸார் வசூல் செய்கிறார்கள்..! புலம்பும் புதுக்கோட்டை மக்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மழையூர், கெண்டையம்பட்டி ஆகிய இரண்டு ஊர்களைச் சேர்ந்த மக்கள், அந்தப்பகுதி போலீஸார்மீது கடுமையானக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.


"மழையூர் போலீஸார் தினமும் மாலையில் கெண்டையம்பட்டி, மழையூர் செல்லும் சாலையில் நின்றுகொண்டு, அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நிறுத்தி,  வலுக்கட்டாயமாக பணம் வசூல் செய்கிறார்கள். ஆவணங்களைக்காட்டினாலும் கூட,' நம்பர் பிளேட் ஏன் இவ்வளவு பழசாக இருக்கிறது?'  'பிரேக் சரியா பிடிக்க மாட்டேங்குது?'  'டயர் ரொம்ப டேமேஜ் ஆயிருக்கு' என்றெல்லாம் சொல்லி பணத்தைப் பிடுங்கிட்டுதான் விடுறாங்க" என்று புலம்பித் தவிக்கிறார்கள் இரு ஊரைச் சேர்ந்த இளைஞர்களும் மக்களும். 

இதுபற்றித் தெரிவித்த அந்தப் பகுதி நபர்,  "நான் பிரபல பத்திரிகையில் விளம்பரப் பிரதிநிதியாக இருக்கிறேன். விளம்பர பணம் வசூல் செய்துவிட்டுத் திரும்பும்போது, என்னுடைய வண்டியை நிறுத்தி, எடுத்த எடுப்பிலேயே, நூற்றைம்பது ரூபாய் கொடுத்துட்டுப் போ' என்றார்கள். எதுக்கு ஸார். நான் ஹெல்மெட் வெச்சிருக்கேன். ஒரிஜினல் லைசென்ஸ், வண்டிக்கான ஆவணங்கள் எல்லாம் வெச்சிருக்கேன். அப்புறம் எதுக்கு பணம் கேக்கறீங்க?னு கேட்டேன். அதுக்கு அவங்க ,'டயர் ஏம்பா இவ்வளவு தேய்ஞ்சு இருக்கு. இந்த மாதிரி டயர் இருந்தா, ஆக்சிடென்டு நடக்கும். வந்து பணத்தைக் கட்டிட்டுப்போனு' சொன்னாங்க. நான் எவ்வளவு சொல்லியும் காதில் வாங்காமல் பணத்தை வசூல் பண்ணிட்டுத்தான் விட்டாங்க" என்றார்.

"ஹெல்மெட், ஒரிஜினல் லைசென்ஸ்னு கெடுபிடி பண்ணிட்டாங்க. அதையெல்லாம் எப்பவுமே கையில் வெச்சுகிட்டுதான் அலையுறோம். போலீஸ் எப்போ கேட்டாலும் காட்டத்தான் செய்யுறோம். ஆனாலும், வழிப்பறிக் கொள்ளை பண்ணுகிற மாதிரி பணத்தை வாங்காம விடமாட்டேன்றாங்க. இந்த அராஜகம் வேற எந்த ஊர்லேயும் இல்லீங்க" என்று கொதிக்கிறார்கள் கெண்டையம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள்.

மழையூர் போலீஸ் தரப்பு விளக்கமோ, வேறுமாதிரியாக இருக்கிறது. 'ஹெல்மெட், லைசென்ஸ் எல்லாம் இருக்கும்தான். ஆனா, ஒரு பைக்கில் நான்கு பேர் போவார்கள். அதுவும் சும்மாவா போவார்கள்? குடித்துவிட்டு அலப்பரையைக் கிளப்பிக்கிட்டுதான் போவார்கள். இதனால் இந்தப் பகுதியில் விபத்துகள் அதிக அளவில் நடக்கிறது. அதனாலேயே அப்படி வருகிறவர்களைப் பிடித்து அபராதம் போடுகிறோம்' என்கிறார்கள்.