வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (11/12/2017)

கடைசி தொடர்பு:16:43 (12/07/2018)

உப்பு நிறுவன சுத்திகரிப்புப் பணிகளைத் தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது - அமைச்சரிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு

தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன சுத்திகரிப்புப் பணிகளைத் தனியாருக்குக் கொடுக்க டெண்டர் விட்டதை ரத்துசெய்ய வேண்டும் என சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில், அதன் மாநில நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை நேரில் சந்தித்து மனுக்கொடுத்தார்கள். பிரச்னையின் தீவிரம்குறித்தும் அவர்கள் அமைச்சரிடம் விவரித்தார்கள். அவரும் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகக் கூறியுள்ளார்.
    

இதுகுறித்து சி.ஐ.டி.யுவின் மாநிலப் பொதுச்செயலாளர் சிவாஜியிடம் பேசினோம். அப்போது அவர், ``ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கதத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் 1979-ல் தொடங்கப்பட்டது. எந்த வேலைவாய்ப்பும் இல்லாத இம்மாவட்டத்தில், வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தோடு 5800 ஏக்கரில் செயல்பட்டுவருகிறது இந்த நிறுவனம். இதில் பணியாற்றும் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புறத் தொழிலாளர்களின் கடும் உழைப்பால், லாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ச்சியடைந்தது. முறையான நிர்வாகமின்மை மற்றும் தேவையற்ற செலவுகள் காரணமாக, இந்த நிறுவனம் நிதி நெருக்கடியை சந்திக்கத் தொடங்கியது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, 51 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் உப்பு சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டது. உப்பளத்தின் எதிர்காலம் இதில்தான் அடங்கியுள்ளது. இதைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விட முயற்சித்ததை சி.ஐ.டி.யு தொழிற்சங்கமும், பொதுமக்களும் இணைந்து தொடர் போராட்டங்களை அந்தப் பகுதியில் நடத்தி முறியடித்தோம். இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் சுத்திகரிப்புப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டதாகத் தெரியவந்தது. இந்த நடவடிக்கையால், இங்கு பணிபுரியும் சுத்திகரிப்புப் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும். இதுகுறித்து அநேக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், போராட்டங்களை சி.ஐ.டி.யு சார்பில் நடத்தியிருக்கிறோம். அதைக் கவனத்தில்கொள்ளாமல் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருக்கிறது. அதனால் தொழில்துறை அமைச்சரிடமே அதுகுறித்துப் பேசவும் மனு கொடுக்கவும் வந்தோம். அமைச்சரிடம் பிரச்னையின் முழு வடிவத்தையும் விவரித்திருக்கிறோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்'' என்றார்.