வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (11/12/2017)

கடைசி தொடர்பு:17:03 (09/07/2018)

உழவர் சந்தையில் கந்துவட்டிக் கும்பலின் அராஜகம்! - வேளாண்துறை எச்சரிக்கை

புதுக்கோட்டை நகரில் உள்ள உழவர் சந்தையில், கந்துவட்டிக் கும்பலின் அராஜகம் அளவுக்குமீறி போய்விட்டதாக வந்த புகார்களை அடுத்து, அங்கே நிரந்தரமான எச்சரிக்கைப் பதாகை ஒன்றை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அமைத்துள்ளது. தவிர, கந்துவட்டிக் கும்பலின் அராஜகம், மிரட்டல் தொடர்பான புகார்களைத் தெரிவிப்பதற்கு புகார்க் குறிப்பேடு ஒன்றையும் அங்கே வைத்திருக்கிறது. 


1996-ம் ஆண்டு,  தமிழகமெங்கும் உழவர் சந்தைத் திட்டத்தை அன்றைய முதல்வர் கருணாநிதி அமல்படுத்தினார். கிராமப்புறப் பகுதிகளில் உள்ள சிறு விவசாயிகள், தாங்கள் உற்பத்திசெய்யும் வேளாண் பொருள்களைத் தாங்களே விற்பனைசெய்துகொள்ளும் விதமாக, உருவாக்கப்பட்ட இந்த உழவர் சந்தைக்கு, மக்கள் மத்தியிலும் சிறு விவசாயிகள் மத்தியிலும் பெரிதான வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில், புதுக்கோட்டை நகரில் அமைந்துள்ள உழவர் சந்தை, நகரின் முக்கிய அடையாளப் பகுதியாகவும் மாறியிருக்கிறது. அநேக மாவட்டங்களில் உழவர் சந்தை இழுத்து மூடப்பட்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டை உழவர் சந்தை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.

இது, உள்ளூர் கந்துவட்டிக் கும்பலுக்குத் தங்கள் தொழிலை கடைவிரிக்க வாய்ப்புள்ள பகுதியாகப் படவே, உழவர் சந்தைக்குள் தங்களது கரங்களை நுழைத்துவிட்டார்கள். இதுபற்றி அங்கு பல வருடங்களாக வியாபாரம் செய்துவரும் மூத்த விவசாயி நம்மிடம் விவரித்தார். அவர், 'ஆரம்பத்துல 1000, 2000னு கம்மியாத்தான் கொடுத்தாங்க. எங்களுக்கு அது பெரிய சுமையா தெரியலே. வியாபாரமும் நல்லபடியாக நடந்ததால, தவணை தவறாம கட்டிக்கிட்டிருந்தோம். பல வருடங்களாகவே, கொடுக்கல் வாங்கலில் எங்களுக்கும் அவர்களுக்கும்,  நபர் ஒருவருக்கு அதிகபட்சம் 5000 ரூபாயைத் தாண்டியதில்லே. நாங்கள், கிராமத்திலிருந்து வருகிறவர்கள். எப்போதுமே பணத்தைவிட, மானம் மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

கந்துவட்டிக்காரர்கள் என்ன ஆசை வார்த்தை காட்டினாலும் பெரிய தொகை கேட்பதில்லை. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எங்களுக்கு பொருளாதார ரீதியில் பல நெருக்கடிகளைத் தந்துவிட்டது. அதனால், கந்துவட்டிக்காரர்களிடம் போய் நின்றோம். அவர்களும் கேட்ட பணத்தை ஆரம்பத்தில் எங்களுக்குக் கொடுத்துவிட்டு, இப்போது அவர்கள் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். உழவர் சந்தையே அவர்களுக்குச் சொந்தமானதுபோலவும் நாங்களெல்லாம் அவர்களது அடிமைபோலவும் நடத்த ஆரம்பித்தார்கள். அதிகாரிகளிடம் புகார் கொடுத்தோம். அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்" என்று சம்பவங்களை ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். வேளாண் அதிகாரியிடம் பேசினோம்.

"புதுக்கோட்டையில், புகழ்பெற்ற உழவர் சந்தை இது. இந்தப் புகழுக்குக் காரணமே இங்கு வியாபாரம் செய்யும் சிறு விவசாயிகள்தான். அவர்களை கசக்கிப்பிழியும் விதமாக கந்துவட்டிக் கும்பல் ஒன்று செயல்படுவதாகப் புகார்கள் வந்தன. அதைத் தடுக்குமாறு எங்கள் உயரதிகாரிகள் உத்தரவிட்டார்கள். உடனடியாக எச்சரிக்கைப் பதாகை வைத்திருக்கிறோம். இப்போது, எந்த கந்துவட்டிக் கும்பலும் உழவர் சந்தைக்குள் வருவதில்லை" என்றார்.