வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (11/12/2017)

கடைசி தொடர்பு:13:32 (10/07/2018)

சோனியாகாந்தி பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய பொன்னமராவதி காங்கிஸார்..! போனில் வாழ்த்திய திருநாவுக்கரசர்

கடந்த சனிக்கிழமை அன்று, அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தியின் 71-வது பிறந்தநாள் என்பது காங்கிரஸ் தொண்டர்கள் பெரும்பாலானோர்க்குத் தெரியவில்லை. ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள காங்கிரஸார், தங்கள் தலைவியின் பிறந்தநாளை அமர்க்களமாகக் கொண்டாடினர்.

 

தகவலறிந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடுசெய்த வட்டாரத் தலைவர் செல்வராஜன், நகரத்தலைவர் பழனியப்பன் ஆகியோருக்கு போன்  பண்ணி பாராட்டியிருக்கிறார். ஒரு கட்சித் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது இயல்பான விஷயம்தானே? பாராட்டும் அளவுக்கு இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்ற யோசனையோடு அதுகுறித்து விசாரித்தோம். 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காங்கிரஸார்தான் கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்தது. அந்தச் செய்தி தெரிந்தபிறகுதான் மாவட்டத்தின் இதரப் பகுதிகளில், குறிப்பாக திருநாவுக்கரசரின் சொந்த ஊரான அறந்தாங்கியிலேயே அவசரமாக சோனியா பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது. 

தங்கள் தலைவியின் பிறந்தநாளை எல்லோருக்கும் முன்னதாகக் கொண்டாடி சபாஷ் வாங்கிய பொன்னமராவதி வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள், இப்போது குஷியில் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசும்போது, 'வருடாவருடம் சோனியா காந்தியின் பிறந்தநாளை நாங்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம். அப்படித்தான் இந்த வருடமும் நாங்கள் ஒன்று திரண்டு, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மக்களுக்கு இனிப்புகள் வழங்கினோம்.

எங்களிடம் இனிப்பு பெற்ற மக்களில் சிலர்,  'சீக்கிரமா மத்தியில் ஆட்சியைப் பிடிச்சுடுங்க. மோடி ஆட்சியில் நாங்கள் படாதபாடு படுகிறோம். இந்த நாட்டை காங்கிரஸ் ஆண்டால்தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்'னு சொல்லிட்டுப் போனாங்க. கொஞ்ச நேரத்தில், தலைவர் திருநாவுக்கரசர் போனில் எங்களைப் பாராட்டினார். மக்களின் பிரச்னைகளை முன்வைத்து போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி அறிவுரை கூறினார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறோம்.

தலைவர் அப்படி பாராட்டியதற்கான காரணம் பின்னர்தான் எங்களுக்குத் தெரிந்தது. அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்திலேயே முதல் நிகழ்ச்சியாக நாங்கள் ஏற்பாடுசெய்த அன்னை சோனியா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்தான் இருந்திருக்கிறது. அதன் பிறகுதான் மற்ற பகுதிகளில் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்' என்றனர்.