மோசமான சாலையால் நிகழும் விபத்துகள்! புதுகை-திருச்சி சாலையின் அவலநிலை

புதுக்கோட்டை - திருச்சி சாலையில், அன்னவாசல் விலக்கு அருகே கார் ஒன்று  விபத்துக்குள்ளானது. இதில், அன்னவாசல் அருகே உள்ள மாங்குடியைச் சேர்ந்த மூன்று வயது மழலை உயிரிழந்தது.


புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடியைச் சேர்ந்தவர், சர்க்கரை மீரான். இவர், ஞாயிற்றுக்கிழமை காலை உறவினரின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகக் குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். காரை நாகராஜன் என்பவர் ஓட்டி வந்திருக்கிறார். கார் மாங்குடியைக் கடந்து, அன்னவாசல் விலக்கு ரோட்டுக்கு வந்தபோது, டயர் வெடித்திருக்கிறது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு இறங்கி மின்சாரக் கம்பத்தில் மோதி நின்றிருக்கிறது. காரில் பயணித்த அத்தனை பேருக்கும் பலமான காயம் ஏற்பட்டிருக்கிறது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு ,ஆம்புலன்ஸில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

அங்கு, சப்ரீனா என்ற மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தாள். மற்றவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
சமீபகாலமாக, இந்தப் பகுதியில்  தொடர்ந்து விபத்துகள் நடப்பதும் அதில் குழந்தைகள் பலியாவதும் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.' கார்,வேன் டயர்கள் வெடிப்பதற்குக் காரணம், மிகவும் மோசமான நிலையில் இருக்கும் சாலைகள்தான்" என்கின்றனர் அன்னவாசல் பகுதி மக்கள். மேலும் அவர்கள் கூறும்போது, "புதுக்கோட்டை- திருச்சி சாலையில், வாரத்துக்கு மூன்று விபத்துகள் நடக்கின்றன.முக்கியமான இந்த சாலையில், பாலங்கள்  கட்டும் வேலைகள் தொடர்ந்து நடப்பதால், சாலை குண்டும்குழியமாக இருக்கிறது. அதனால், விபத்துகளும் அதிக அளவில் நடக்கின்றன" என்கிறார்கள்.

கார் மெக்கானிக் ஒருவர், "இப்போதெல்லாம் உபயோகப்படுத்தப்பட்ட கார்கள் 'செகண்ட் சேல்ஸாகத் தள்ளிவிடப்படுகிறது. அதற்கென இருக்கும் புரோக்கர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, வாங்குபவர்களின் தலையில் சுமாரான கார்களைக் கட்டிவிடுவார்கள். அவற்றின் டயர்கள் நல்ல கண்டிஷனில் இருக்காது. கார் பற்றிய டெக்னிக்கல் தெரியாமல், கார் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வாங்குபவர்கள் இப்போது பெருகிவிட்டார்கள்.மோசமான சாலையில் மோசமான நிலையிலிருக்கும் டயர்களைக்கொண்ட காரில் அதிக  நபர்களோடு பயணம் செய்கையில் இப்படிப்பட்ட விபத்துக்கள் நேரிடுகின்றன. கார் மெக்கானிக் ஆலோசனை இல்லாமல், 'செகண்ட் சேல்ஸ்'காரை வாங்கக்கூடாது"என்றார். விபத்துக்குள்ளான அந்தக் கார் டயரின் நிலைமை மோசமாக இருந்தது போலீசாரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!