வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (11/12/2017)

கடைசி தொடர்பு:09:10 (11/12/2017)

பேரறிவாளன் வேலூரிலிருந்து புழல் சிறைக்கு மாற்றம்?

பேரறிவாளன், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வேலூர் மத்திய சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு, கடந்த நவம்பர் 20-ம் தேதி வேலூரில், சிறுநீரகம், ரத்தம் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டன. சோதனைக்குப் பின், அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைசெய்தனர். அதன்பேரில், புழல் மத்திய சிறைக்கு மாற்றும்படி பேரறிவாளன் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், விரைவில் புழல் மத்திய சிறைக்கு மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. இதற்கான அனுமதியை சிறைத்துறை ஏ.டி.ஜி.பி வழங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ சிகிச்சைக்காக புழல் மத்திய சிறையில், பேரறிவாளன் ஒரு மாதம் இருப்பார் என்று தெரிகிறது. தந்தை குயில்தாசனின் உடல்நிலை மோசமடைந்ததால், 26 ஆண்டுகளில் முதல்முறையாக பேரறிவாளனுக்கு கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் ஒரு மாதம் பரோல் விடுப்பு வழங்கப்பட்டது. அந்த பரோல் விடுப்பு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.