வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (11/12/2017)

கடைசி தொடர்பு:10:19 (11/12/2017)

கொடைக்கானலில் களைகட்டும் இரண்டாவது சீசன்!

கொடைக்கானல் 

'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலில், இரண்டாவது சீசன் துவங்கியுள்ளது. கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். ஆண்டுக்காண்டு, கோடையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பூங்கா, படகு சவாரி, குணா குகை என எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், எதையும் ஆற அமர பார்த்து ரசிக்க முடியாது. கொடைக்கானலின் அழகை, அள்ளிப் பருக நினைப்பவர்கள், டிசம்பர் மாதத்தில் வரலாம். இரண்டாவது சீசன் என அழைக்கப்படும் இந்த சீசனில், தற்போது சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கொடைக்கானலுக்கு வரத்தொடங்கியுள்ளனர். இரவு நேரம் கடுமையான குளிர், பகலில் மிதமான குளிர், வெயில் என சீதோஷ்ணநிலையும் சிறப்பாக இருப்பதால், இதை வெகுவாக ரசிக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையை விரும்பும் வெளிநாட்டினர், இந்த சீசனில் அதிகம் கொடைக்கானல் வந்திருக்கிறார்கள். 

கொடைக்கானல்பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ, இந்த ஆண்டு பூக்கத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் பெய்த மழையால், கொடைக்கானல் முழுவதும் பசுமை போர்த்தியதுபோல காட்சியளிக்கிறது. குறிப்பாக, டிசம்பர் மாதத்தில்தான் குறிஞ்சிபூக்கள் அதிக அளவில் பூக்கும். கோடையில் ஜனநெருக்கடியான ஏரிச்சாலை தற்போது, அமைதியின் உருவாகத் திகழ்கிறது. தேனிலவுத் தம்பதிகளை மட்டும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. குணா குகைப்பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக இருக்கும். ஆனால், தற்போது அங்கும் நெரிசல் இல்லாமல் இருக்கிறது. பாம்பார்புரம் அருவில் வெள்ளியை உருக்கியதுபோல நீர் கொட்டுகிறது. மலைகளின் இளவரசி ஆனந்த நடனமிடும் காட்சியைக் காண நினைப்பவர்கள், கொடைக்கானலுக்கு வந்து போகலாம். கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறையைக் கழிக்க, கொடைக்கானல் சுற்றுலாவைத் தேர்ந்தெடுக்கலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க