தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயப் பணிகள் தீவிரம்

பருவமழையால் தாமிரபரணிப் பாசனம்மூலம் போதிய தண்ணீர் கிடைத்துவருவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் நெல் சாகுபடிப் பணிகளில் தீவிரம்காட்டிவருகின்றனர்.

Agricultural activities in Thoothukudi district

தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தின்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய தாலுகாக்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் நெல், வாழை சாகுபடி நடந்துவருகிறது. முன்குறுவை, குறுவை மற்றும் பிசானம் ஆகிய முப்போகம் விளைந்து வந்தது. தண்ணீர்ப் பிரச்னை காரணமாக முப்போக சாகுபடிக் குறுவை, பிசானம் ஆகிய இருபோக சாகுபடி மட்டுமே நடந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை சரியாகப் பெய்யாததாலும், அணைகளில் நீர் மட்டம் குறைந்துபோனதாலும் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடர்ச்சியாகப் பெய்த பருவமழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் கடனா அணை, கருப்பா அணை, கொடுமுடியாறு அணை, குண்டாறு அணை, மணிமுத்தாறு அணை, சேர்வலாறு அணை, ராமாநதி அணை ஆகிய அணைகள் நிரம்பியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணியின் 7-வது அணையான மருதூர் அணை, கடந்த 10 ஆண்டுகளில் இந்த முறைதான் நிரம்பியுள்ளது. அதேபோல, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் நிரம்பியுள்ளது.  இந்த அணைகளிலிருந்து வெளியேறும் தண்ணீர், தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில்  தாமிரபரணி நேரடிப் பாசனத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன. இதன்மூலம் சாகுபடிக்காக போதிய தண்ணீர் கிடைத்துள்ளது.

வழக்கமாக பிசான பருவ சாகுபடியில், செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்துக்குள் நடவுப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிடும். ஆனால் இந்த ஆண்டு, தண்ணீர் தாமதமாகக் கிடைத்துள்ளதால் விவசாயிகள் நாற்று நடும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். டிசம்பர் – ஜனவரி மாதங்களில் தொடங்கும் சாகுபடியை ‘நவரை பருவம்’ என்பார்கள். இது, வட மாவட்டங்களில் மட்டும் நடந்துவருகிறது. தற்போது தண்ணீர் தாமதமானதால் தென் மாவட்டங்களில் இந்த முறை ‘நவரை பருவ’த்தில் சாகுபடிப் பணிகளை, சுமார் 14 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பில் விவசாயிகள் தொடங்கிள்ளனர். இப் பருவமழையினால் மானாவாரி நிலங்களிலுள்ள ஊருணிகள், கண்மாய்கள் நிரம்பியுள்ளதால் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் மற்றும் கயத்தார் ஆகிய தாலுகாக்களில் மானாவாரிப் பயிர்களான உளுந்து, பாசி, கம்பு, சோளம், பருத்தி ஆகியவற்றின் சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!