'தைரியமிருந்தால் ஆளுநரை எதிர்த்துப் போராட்டம் நடத்துங்கள்'- கட்சித் தலைவர்களைச் சீண்டும் ஹெச்.ராஜா

புதுச்சேரி பா.ஜ.க அலுவலகத்துக்கு வந்த பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "கழிப்பிடங்கள் மற்றும் வீடு கட்டும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களில் மத்திய அரசு முழுத் தொகையை அளித்துவருகிறது. ஆனால், மாநில அரசின் நிர்வாகத் திறமையின்மையின் காரணத்தால், மத்திய அரசிடம் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவருகிறார் நாராயணசாமி. ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களைத் தூண்டிவிட்டு பிரச்னை ஏற்படுத்திக்கொண்டிருப்பது நாராயணசாமிக்கு அழகல்ல. இதை காங்கிரஸ் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில், பா.ஜ.க மேற்கொள்ளும் நடவடிக்கையை முதல்வர் நாராயணசாமியால் தாங்க முடியாது. ஒகி புயல் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பரிவார் உள்ளிட்டவர்கள்தான் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருகின்றனர். ஆனால்,  ஊடகங்கள் அங்குள்ள இளைஞர்கள் சேவை செய்துவருவதுபோல காண்பித்துவருகின்றன.

மீனவர்களைவிட விவசாயிகள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒகி புயல் தொடர்பாக கடந்த மாதம் 28, 29, 30 ஆகிய மூன்று நாள்கள் மத்திய அரசு தொடர்ந்து எச்சரித்தது. ஆனால், அதை மாநில அரசு சரியாகப் பின்பற்றவில்லை. மீட்புப் பணியில் கப்பற்படையும் கடலோரக் காவல் படையும் ஈடுபட்டுவருகின்றனர். மீனவர்களையும் மக்களையும் மீட்க பிரதமர் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். ஆனால், பிரதமர்மீது பொய்ப் பிரசாரத்தைச் செய்துவருகின்றனர். இவர்கள் நடத்துவது மீனவர் போராட்டம் அல்ல. மதப்போரைப் போல நடத்திவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் தீயசக்திகளை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். திருமுருகன் காந்தி போன்ற தேசத்துரோகிகள் அநாகரிகமாக நடந்துவருகின்றனர். தீயசக்திகள் மதப்போரை உருவாக்குவதுபோல செயல்படுகின்றன. திருமுருகன் காந்தி இதுவரை ஒரு மீனவரை மீட்டிருப்பாரா?

ஆற்றில் அடித்துச்செல்லப்படும் நரி, ஊரே அழிந்து வருவதாகக் கூறுவதுபோல உள்ளது. முதல்வருக்கும் பிரதமருக்கும் கண்ணீர் அஞ்சலி என மே 17 இயக்கம் பேனரைப் பிடித்துப் போராட்டத்தில் ஈடுபடுகிறது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் உடனடியாக திருமாவளவன் கைது செய்யப்பட வேண்டும். அப்போதுதான் சாதி மோதல் குறையும். சாதி மோதல் வந்தால்தான் மதம்மாற்றம் செய்ய முடியும் என்பதற்காகவே செயல்படுகின்றனர். மதமாற்றும் கும்பலோடு இணைந்துகொண்டு செயல்படுகின்றார். திருமாவளவன் பேசியதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. அனைத்து சிவன் கோயில்களுக்கும் பாதிப்பு உள்ளது. இவர் வெளியில் இருப்பது சமூகத்துக்கு ஆபத்து. எனவேதான், அவர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட வேண்டும். தைரியம் இருந்தால், ஆளுநரை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்தட்டும். ஆளுநருக்கு சட்டப்படி செயல்பட முழு அதிகாரம் உள்ளது. அதேபோல, தி.மு.க-வுக்கு முதுகெலும்பு இருந்தால், இப்போது இந்து எதிர்ப்புப் போராட்டம் நடத்துங்கள்" என்றார் ஆவேசமாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!