வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (11/12/2017)

கடைசி தொடர்பு:16:19 (11/12/2017)

புயல் கடந்தும் அதன் பாதிப்புகளைக் கடந்துசெல்ல இயலா மக்கள்- உதவிக்கரம் நீட்டும் சமூக நல அமைப்புகள்

 

ஒக்கி

கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி, வங்கக் கடலில் உருவான ஒகி புயலால் தென் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில்  பகுதிகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகியது. புயல் கடந்தும் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை இன்னும் அப்பகுதி மக்களால் கடந்துசெல்ல இயலவில்லை. புயல் உருவான சமயத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் மாயமாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தங்குவதற்குப் போதிய இடம் இன்றித் தவித்தனர். அரசு, இம்மக்களுக்கு ஆதரவு தராத பட்சத்தில், சில அமைப்புகளே ஆதரவு அளித்துவருகின்றன.

புயலின் கோர தாண்டவத்துக்கு இரையான மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக,  மதுரையிலிருந்து 'பலகரங்கள்' என்ற சமூக நல அமைப்பு, 15 லட்சம் மதிப்புள்ள பொருள்களுடன் தனது பயணத்தைக் தொடங்கியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், இவர்களில் சேவையை ஊக்கப்படுத்தி, இப்பயணத்தைத் தொடங்கிவைத்தார். சமூக நல ஆர்வலர்களும் பல்வேறு அமைப்புகளும் இவர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். இவர்கள், நேரடியாகக் களத்திற்கு என்று ஆய்வுசெய்து,மக்களுக்குத் தேவையான உணவு, அரசி, துணிகள், போர்வைகள், சோப், காயத்திற்கான மருந்துகள் மற்றும் களிம்புகள் ஆகியவற்றை விநியோகம்செய்கின்றனர். இவர்களுடன் ஒரு மருத்துவர் குழுவும் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கிவருகின்றன.

கன்னியாகுமரி

 

மூன்று நாள்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த உதவி வழங்குதலில்,1000 குடும்பங்களுக்குத் தேவையான பொருள்களையாவது வழங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் இந்த ஆர்வலர்கள் செயல்பட்டுவருகின்றனர். என்னதான் நாம் உதவிகளைச் செய்துவந்தாலும் அரசுத் தரப்பிலிருந்து இம்மக்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்காத வரை இவர்களால் புயல் பாதிப்பிலிருந்து மீண்டெழ முடியாது என்கின்றனர் இந்த ஆர்வலர்கள்.