வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (11/12/2017)

கடைசி தொடர்பு:15:35 (11/12/2017)

'வந்தே மாதரம்' கோஷத்துடன் பாரதி இல்லத்துக்கு ஊர்வலமாகச் சென்ற இளம் பாரதிகள்!

Young bharathis went to bharathis house

மகாகவி பாரதியாரின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு, பாரதி வேடமிட்ட பள்ளி மாணவர்கள், பாரதி வீட்டுக்கு ஊர்வலமாகச் சென்று,  அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், பாரதியின் நினைவு மணிமண்டபம், பாரதி கூட்டுறவுப் பஞ்சாலை, பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை உள்ளன. தூத்துக்குடி – மதுரை சாலையில் உள்ள எட்டயபுரத்திலுள்ள பாரதியின் வீடு, மணிமண்டபத்தைக் காண பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் வருகைதருவார்கள்.

Young bharathi went to bharathis house

கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை மற்றும் எட்டயபுரம் பாரதி அரிமா சங்கம் சார்பில், பாரதியின் பிறந்தநாள் விழா இன்று நடந்தது. இதை முன்னிட்டு, எட்டயபுரத்திலுள்ள தமிழ்பாப்பிஸ்து துவக்கப்பள்ளி மற்றும் மாரியப்ப நாடார் நடுநிலைப்பள்ளியின் 136 மாணவ, மாணவியர் பாரதியார் வேடம் அணிந்து, ’பாரதி’ என்ற பட்டம் வழங்கப்பட்ட , அரசவைக் கவிஞராகப் பணி புரிந்த எட்டயபுரம் மன்னனின் அரண்மனையிலிருந்து  கிளம்பி, பாரதியின் பிறந்த வீட்டுக்கு” வந்தே மாதரம், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற கோஷங்களை எழுப்பியும்,  பாரதியின் பாடல்களைப் பாடியும், கோலாட்டம் அடித்தபடியும் ஊர்வலமாக வந்தனர். பின்னர், பாரதியின் சிலைக்கு மாணவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதைசெய்தனர்.

Young bharathi wemtbto bharathi house

"இயன்றவரை தமிழிலேயே பேசுவேன், தமிழிலேயே எழுதுவேன். மறந்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன். பொய்மை, இரட்டுற மொழிதல், நய வஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப்பிழைப்பென்று கொள்வேன். எப்பொழுதும் மலர்ந்த முகம். இனிய சொல், தெளிந்த சிந்தனை இவற்றோடு இருப்பேன்" என இளம் பாரதிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், பாரதியின் 136-வது பிறந்தநாள் விழா, பாரதி மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. மாலையில் பாரதி குறித்த கவியரங்கம், கருத்தரங்கம், உரைவீச்சு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பாரதியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திட பல மாவட்டங்களிலிருந்தும்  தமிழ் அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாரதியின் பிறந்த வீடு, மணி மண்டபத்துக்கு வருகைதந்துள்ளனர்.