வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (11/12/2017)

கடைசி தொடர்பு:15:14 (11/12/2017)

`மீனவர்களை மீட்டுத்தாருங்கள்...!' கண்ணில் கறுப்புத்துணி கட்டி மீனவ மக்கள் போராட்டம்

காணாமல்போன மீனவர்களை மீட்டுத்தரக்கோரி குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் கிராமமக்கள் கண்ணில் கறுப்புத்துணி கட்டிப் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டம்


ஒகி புயல் தாக்கிய சமயத்தில், கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த குமரி மாவட்டம் நீரோடி, தூத்தூர், வள்ளவிளை, இரவிபுத்தன்துறை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மீனவர்கள் குழித்துறை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கப்பற்படை உதவியுடன் மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. எனினும், இன்னும் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியாத நிலை நீடிக்கிறது. மீனவர்களைத் தேடும் பணியை முடுக்கி விடக்கோரியும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்கக்கோரியும் தமிழகம் முழுவதும்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

போராட்டம்இந்நிலையில், இன்று காலை இரவிபுத்தன்துறை கிராமத்தில் மீனவர்கள் கறுப்புத்துணி கட்டிப் போராட்டம் நடத்தினார்கள். எம்.எல்.ஏ-க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் அந்தப் பகுதியில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்கள். தமிமுன் அன்சாரி பேசும்போது, “கன்னியாகுமரி மாவட்டத்துக்கு முதல் எடப்பாடி பழனிசாமி வந்து மீனவர்கள் பிரச்னையைக் கேட்க வேண்டும். குமரி மாவட்டத்தைத் தேசியப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் 500 கிலோமீட்டர் தாண்டி மீனவர்களைத் தேட வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

“போராட்டம் நடத்திய மீனவர்கள்மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். ராணுவத்தை ஈடுபடுத்தி மீட்புப் பணியைத் துரிதப்படுத்த வேண்டும்” என்று தனியரசு பேசினார். இவர்கள் இருவரும் பேசி முடித்த சமயத்தில் போராட்டத்தில் பங்கேற்ற மீனவப்பெண்கள் இருவரையும் சூழந்துகொண்டு வாக்குவாதம் செய்தனர். “தினசரி வந்து பேசிவிட்டுதான் போகிறீர்கள். நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை” என்று அவர்கள் ஆவேசமாகக் கூறினார்கள். நீரோடி, தூத்தூர் உள்ளிட்ட மீனவக் கிராமங்களிலும் இதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க