வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (11/12/2017)

கடைசி தொடர்பு:16:15 (11/12/2017)

கார் டிரைவரை நூதன முறையில் ஏமாற்றியவர்... கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

கோவையில், தொழிலாளியிடம் நூதன முறையில் ஏமாற்றிய முதலாளிகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

கோவை, புலியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது கணவர் மரியதாஸ். இவர், கோவை பாஸ்டென் என்ற துணிக்கடை உரிமையாளர் ராஜேந்திரனிடம் வீட்டுப் பத்திரத்தை வைத்துக் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், அவர்களது சொத்தை ராஜேந்திரன் ஏமாற்றிவிட்டதாக மரியதாஸ் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மரியதாஸ், அவரது மனைவி ஜோதி, மகள் அனிதா ஆக்னஸ்,  மகன் ஆல்வின் ஜெரால்டு ஆகியோர் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆல்வின் ஜெரால்டு, "எனது அக்காவின் திருமணத்துக்காக தாட்கோ வங்கியில், எங்களது வீட்டுப் பத்திரத்தை அடமானம்வைத்து கடன் பெற்றிருந்தோம். அதை மீட்பதற்காக, ராஜேந்திரனிடம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தோம். அதற்குப் பதிலாக, எங்களது வீட்டுப் பத்திரங்களை ராஜேந்திரனிடம் கொடுத்திருந்தோம்.

இதனிடையே, எங்களது வீட்டுப் பத்திரம் மற்றும் அவருக்கு நன்கு அறிமுகமான சிலரது வீட்டுப் பத்திரங்களை, ஒப்பணக்கார வீதியில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியில் அடமானம் வைத்து, 1 கோடியே 20 லட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்றிருந்தார். அதேநேரத்தில், எங்களது வீட்டுத் தேவைக்காக நாங்கள் ராஜேந்திரனிடம் 2 லட்ச ரூபாயை கடனாகப் பெற்றிருந்தோம்.  அவரது கடனைச் சரியாக அடைக்காததால், எங்களது வீட்டின்மீது ஜப்தி நடவடிக்கை எடுப்பதாக வங்கி நோட்டீஸ் அனுப்பியது. இதனால், எங்களது வீட்டுப் பத்திரத்தை மீட்கக் கோரி நாங்கள் அசலும், வட்டியும் சேர்த்து 11 லட்ச ரூபாய் கொடுத்தோம். ஆனால், நாங்கள் பலமுறை கேட்டும் அவர் வீட்டுப் பத்திரத்தை மீட்டுத் தரவில்லை.  மேலும், என்னை கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால், நான் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தேன்.

பத்திரத்தை மீட்டுத் தரமுடியாது என கெட்ட வார்த்தையில் திட்டுகிறார். அவருக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு இருப்பதால், போலீஸிலும் நடவடிக்கை இல்லை. எனவே, ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது வீட்டுப் பத்திரத்தை மீட்டுத் தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.