கஞ்சா மதிப்பு ரூ.1 கோடி! மண்டபம் போலீஸை மிரளவைத்த சித்திக் அலி | 200 kg kanja seized at mandapam

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (11/12/2017)

கடைசி தொடர்பு:17:18 (11/12/2017)

கஞ்சா மதிப்பு ரூ.1 கோடி! மண்டபம் போலீஸை மிரளவைத்த சித்திக் அலி

மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட 200 கிலோ கஞ்சா மூட்டைகளை  போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு தங்க கட்டிகள் கடத்தி வருவதும், தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களும் மாத்திரைகள், ரசாயனப் பொடிகள், பீடி பண்டல்கள், கடல்அட்டை ஆகியன கடத்தப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்தக் கடத்தலில் ஈடுபடுபவர்களைப் போலீஸார் அவ்வப்போது கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டேதான் உள்ளன.

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா மூடை

இந்நிலையில் இலங்கைக்கு கடத்துவதற்காகக் கஞ்சா மூடைகள் கார் மூலமாக மண்டபத்துக்கு கொண்டு வரப்படுவதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மண்டபம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனபால், மண்டபம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி தலைமையிலான போலீஸார் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

மண்டபத்தை அடுத்துள்ள குஞ்சார் வலசை கிராமத்தின் அருகே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அந்தக் காரினுள் 4 மூடை கஞ்சா இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவற்றைக் கைப்பற்றிய போலீஸார் காரை ஓட்டி வந்த தேவிபட்டிணம் பகுதியை சேர்ந்த சித்திக் அலி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் பிடிபட்ட 200 கிலோ கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார் 1 கோடி எனவும், மண்டபம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக இந்தக் கஞ்சா கொண்டு வரப்பட்டது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.