ராமேஸ்வரத்தில் ஜெய்ப்பூர் தம்பதிக்கு நேர்ந்த சோகம்!

ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் நீராடும் பக்தர்கள்

ராமேஸ்வரம் கடலில் தீர்த்தமாடிய ராஜஸ்தான் பக்தரின் பணம், செல்போன், ஏ.டி.எம் கார்டு ஆகியன திருட்டுப்போனதால் அந்தப் பக்தர் பரிதவித்துப்போனார்.

இந்துக்களின் புனித தலமான ராமேஸ்வரத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் நீராடிய பின்னர், அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவது வழக்கம். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பக்தர் துளசிராம் தன் மனைவியுடன் ராமேஸ்வரம் வந்திருந்தார். இன்று காலை அவர் அக்னி தீர்த்த கடற்கரையில் தனது உடைமைகளை வைத்துவிட்டு தன் மனைவியுடன் கடலில் இறங்கி நீராடியுள்ளார். நீராடிய பின்னர், கரைக்கு வந்து பார்த்த து தனது உடைமைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரித்த நிலையில் துளசிராமின் உடைமைகள் காணாமல்போனது தெரியவந்தது. துளசிராம் தனது உடைமைகளுடன் வைத்திருந்த ரூ.16,500, செல்போன், ஏ.டி.எம் கார்டு, ஆதார் கார்டு ஆகியன இருந்த கைப்பையும் திருட்டுப்போயிருந்தது. பணம், செல்போன், ஏ.டி.எம் கார்டு என அனைத்தும் திருட்டுப்போனதால் கோயிலுக்குச் செல்லவோ அல்லது ஊருக்குத் திரும்பிச் செல்லவோ வழியின்றி தவித்தார். இதையடுத்து ராமேஸ்வரம் கோயில் காவல் நிலையத்தில் துளசிராம் தனது பணம் திருட்டுப்போனது குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீஸார் ஜெய்ப்பூரில் உள்ள துளசிராமின் மகனைத் தொடர்புகொண்டு பணம் அனுப்பச் செய்தனர்.

மகன் அனுப்பிய பணத்தைப் பெற்றுக்கொண்ட துளசிராமையும் அவர் மனைவியையும் கோயிலுக்கு அழைத்து சென்ற போலீஸார் சாமி தரிசனம் செய்து வைத்ததுடன் அவர்களுக்கு உணவு உபசரிப்பு செய்து வழியனுப்பி வைத்தனர். ஐயப்ப சீஸன் என்பதால் வழக்கத்தைவிட கூடுதலான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து செல்கின்றனர். இதைக் குறிவைத்து செயல்படும் திருடர்கள் அதிகாலை வேலைகளில் தீர்த்தமாட செல்லும் பக்தர்களின் பொருள்களைக் கொள்ளையடித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இது போன்று 3 திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அக்னி தீர்த்த கடலில் நீராட வரும் பக்தர்கள் பாதுகாப்புக்கு என போதுமான காவலர்கள் இல்லாத நிலை தொடர்கிறது. இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் கூடுதல் போலீஸார் நியமிக்கப்படவில்லை. மேலும், இது போன்ற திருட்டு சம்பவங்களைக் கண்காணிப்பதற்காக அக்னி தீர்த்த கடற்கரையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கேமராக்களின் பதிவாகும் காட்சிகளைக் கண்காணிக்கக்கூடிய மானிட்டர் கருவிகள் சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்து இயங்காத நிலையில்போனது. போதுமான போலீஸார் பாதுகாப்புக்கு இல்லாதது, கண்காணிப்பு கேமரா செயல்படாதது ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் திருடர்கள் துணிந்து, திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!