வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (11/12/2017)

கடைசி தொடர்பு:17:55 (11/12/2017)

பணியிலிருந்தும் மெமோ அனுப்பிய மருத்துவமனை! கலெக்டரிடம் புகார் அளித்த ஆண் செவிலியர்

புகார்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நா.வினோத்குமார் என்பவர் உதவி செவிலியராகப் பணியாற்றிவருகிறார். சில பொய்யான காரணங்களைக் கூறி மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு மெமோ வழங்கி எச்சரித்துள்ளது. அவர், தனக்கு வழங்கப்பட்ட மெமோவுக்கு, நிர்வாகம் மீது சரியான நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில், “நான் அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலிய உதவியாளராக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறேன். இதுவரை என்மீது எந்தப் புகாரும் இருந்ததில்லை.இந்நிலையில் கடந்த நவம்பர் 14-ம் தேதி இரவுப்பணியில் நான் இல்லை என்று கூறி, மெமோ எழுதி இரவுப்பணியில் இருந்த பெண் செவிலியர், செவிலிய கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அன்றிரவு எனக்கு, சார்ஜென்ட் வேறொரு வார்டில் பணி ஒதுக்கீடு செய்திருந்தார். எனவே, என்மீது இருந்த காழ்ப்பு உணர்ச்சி காரணமாகப் பணியில் இருந்த பெண் செவிலியர் பொய்யான காரணங்களைக்கூறி மெமோ எழுதிக்கொடுத்துள்ளார். மேலும், இரவுப்பணி கண்காணிப்பாளர் என்மீது இருந்த முன்பகையின் காரணமாக அந்தப் போலியான மெமோவை பரிந்துரை செய்துள்ளார். என் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பதற்கான தக்க ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. செவிலிய கண்காணிப்பாளர், சார்ஜென்ட் வெங்கடாசலம் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என மனுவில் தெரிவித்திருந்தார். புகாரை ஏற்றுக்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலம், ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகக் கூறியதாக   வழக்கறிஞர்கள் செங்குட்டுவன், மாரிவேல் ராஜா தெரிவித்தனர்.