வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (11/12/2017)

கடைசி தொடர்பு:18:30 (11/12/2017)

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடத்த கண்டிஷன் போடும் டாக்டர் தமிழிசை! #RKNagarAtrocities

இடைத்தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும். இல்லையென்றால் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்தி எந்த பிரயோஜனமும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை புகார் தெரிவித்துள்ளார். பூத் சிலிப் என்ற பெயரில் பணப்பட்டுவாடா இப்போதே தொடங்கிவிட்டது என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழிசை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரங்களில் அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி, சுயேச்சையாக டி.டி.வி.தினகரன் என்று வேட்பாளர்கள் சுறுசுறுப்பாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாண்டியராஜன் ஆகியோர் முக்கியப் பொறுப்பு ஏற்று தேர்தல் வேலைகளைச் செய்து வருகின்றனர். இவர்களைத்தவிர மற்ற அமைச்சர்களும் தெருத்தெருவாகச் சுற்றி வருகிறார்கள். தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் பிரசாரம் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் என்று மெகா டீம் அங்கே முகாமிட்டு தேர்தல் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள்.

டி.டி.வி.தினகரன்,குக்கர் பாத்திரத்தோடு தொகுதியை வலம் வருகிறார். அவருக்குத் தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்துள்ள ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டுள்ளனர். எம்.ஜி.ஆர் பாடல்களைப் போட்டு தெருத்தெருவாகச் சுற்றி வருகிறார்கள். ஆரத்தி எடுத்தல், வேட்பாளர் வரவேற்பு என்று தடபுடல் ஏற்பாடுகளுக்குப் பஞ்சமில்லை. ஆளும்கட்சி ரேஞ்சில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர். டி.டி.வி.தினகரன் வேகத்தைப் பார்த்து அனைத்துக் கட்சிகளும் மிரண்டு நிற்கிறார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன், தெம்போடு களத்தில் இருக்கிறார். மத்தியில் ஆளும்கட்சி என்ற அதிகாரத்தோடு பிரசாரத்திற்கு வந்தாலும் கள நிலவரம் வேறுமாதிரியாக இருக்கிறது. டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க மதுசூதனன்,  தி.மு.க மருதுகணேஷ் போன்றவர்களின் தேர்தல் யுக்திகளோடு பா.ஜ.க-வால் போட்டி போடவே முடியவில்லை என்பதுதான் தற்போதைய கள நிலவரம்.

மதுசூதனன்

இந்நிலையில், கோட்டையில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் இன்று மதியம் 12 மணிக்குப் புகார் மனு கொடுத்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை. பின்னர், நிருபர்களிடம் தமிழிசை கூறுகையில், ''தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்துதான் இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டி போடுகிறோம். மற்ற கட்சிகளைப்போல குறைசொல்வது மட்டும் எங்கள் வேலை அல்ல. ஆக்கபூர்வமான கட்சியாக இருக்க ஆசைப்படுகிறோம். அதற்காக தேர்தலில் நிற்கிறோம். வருமான வரித்துறை, தேர்தல் ஆணையங்கள் எல்லாம் தனித்தனியான தன்னாட்சி அமைப்புகள். இந்த அமைப்புகள் மீது நம்பிக்கை வேண்டும். 

எனவேதான், தேர்தல் களத்தில் உள்ள முறைகேடுகளை ஆதாரத்தோடு புகாராகக் கொடுத்துள்ளோம். 5 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என்று தடை உள்ளது. ஆனால், அதெல்லாம் இங்கே காற்றில் பறக்கிறது. தேர்தல் ஆணையம்தான் பூத் சிலிப் கொடுக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க., தி.மு.க., குக்கர் பார்ட்டி டி.டி.வி.தினகரன் என்று அவர்கள் இஷ்டம் போல பூத் சிலிப் என்ற பெயரில் முறைகேடுகளை அரங்கேற்றி வருகிறார்கள். கட்சியே இல்லாதவர்கள் எல்லாம் பெரும் அதிகார பலத்தோடு வலம் வருகிறார்கள். பரிசு பொருள்கள், பணம் என்று இப்போது; தேர்தலுக்குப் பிறகு என்று முறைகேடுகள் அரங்கேறி வருகிறது. அதற்கான, வீடியோ ஆதாரங்கள், பூத் சிலிப்கள், வாட்ஸ் அப் தகவல்களைத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

தினகரன்

கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் இவ்வளவு விதிமுறைகளை மீறி இந்தத் தேர்தல் நடைபெற வேண்டுமா என்ற கேள்வியை நாங்கள் முன்வைக்கிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையைத் தேர்தல் ஆணையத்திற்கு வைத்துள்ளோம். இல்லையென்றால் தேர்தலை நடத்தி பயனில்லை என்பதுதான் எங்கள் வாதம். தேர்தலை நடத்தவே கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கட்சியே இல்லாதவர்கள், அதிக அதிகாரத்துடன் வலம் வருகிறார்கள். மக்கள் பிரச்னையைப் பார்க்க, பேச அ.தி.மு.க அமைச்சர்கள் ஸ்கூட்டரில் போனார்களா? அவர்கள் போகும் போது பல புகார்கள் வருகிகின்றன. பணப்பட்டுவாடா நடக்கிறது என்று ஊடகங்கள் எழுதுகின்றன. பா.ஜ.க-வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் புகார் கொடுக்கவில்லை. இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? தேர்தல் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றுதான் போராடிக்கொண்டிருக்கிறோம். மக்களைச் சுயமாகச் சிந்திக்க விடுங்கள் என்றுதான் கேட்கிறோம். நேர்மையாக தேர்தல் நடைபெற வேண்டும். நியாயமாக எம்.எல்.ஏ தேர்வு நடக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தப் போராட்டம்'' என்று சொன்னார்.

கண்டிஷன்களை பலமாக அடுக்கியிருக்கிறார் டாக்டர் தமிழிசை..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்