வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (11/12/2017)

கடைசி தொடர்பு:19:55 (11/12/2017)

`இப்படிதான் செய்வேன்; முடிந்ததைப் பாருங்கள்' - ரேஷன் கடை பெண் ஊழியரால் கொந்தளித்த மூன்று கிராம மக்கள்

"கடந்த ஆறுமாதங்காகவே ரேஷன் பொருள்களை வழங்குவதில்லை; எதிர்த்துக் கேட்டால் இப்படித்தான் செய்வேன்; உங்களால் முடிந்ததை பாருங்கள்" என்று மிரட்டிய ரேஷன் கடையின் விற்பனையாளரைக் கண்டித்து மூன்று கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

                    

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள  பிள்ளைபாளையம், கொல்லாபுரம், புளியந்தோப்பு உள்ளிட்ட கிராம மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்குவதற்காகக் கொல்லாபுரத்தில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்தக் கடையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பொருள்களை வாங்கி வருகின்றனர். ஆனால், விற்பனையாளர் நித்தியா பொருள்கள் முறையாக வழங்குவதில்லை. இதனிடையே, விற்பனையாளரை உடனடியாக மாற்றக்கோரி சென்னை - கும்பகோணம் சாலையில் குறுக்கு ரோட்டில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

                            

தகவலறிந்த மீன் சுருட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், ஜெயங்கொண்டம் தாசில்தார் வேல்முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடன் விற்பனையாளர் பணியிடம் மாற்றம் செய்யப்படும், அனைத்துப் பொருள்களும் தடையின்றி வழங்கப்படும் என கூறியதற்குப் பிறகு, பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

                        

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசியபோது. இந்தக் கடையில் விற்பனையாளராக இருப்பவர் நித்தியா. இவர் கடந்த ஆறு மாதங்களாகவே முறையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படுவதில்லை. அரிசி வைத்துக்கொண்டே அரிசி இல்லை என்று சொல்வதுமட்டுமல்லாமல் பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்களை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்தது. அந்தவகையில் தினமும் காலையில் தாமதமாக வருவதுமட்டுமல்லாமல் அப்படியே வந்தாலும் 3 மணி நேரம்கூட இருப்பதில்லை. அப்படி எதிர்த்துக் கேட்டால் ஆபீஸ் மீட்டிங் உள்ளது எனக் கூறிவிட்டுச் சென்றுவிடுகிறார். இதைத் தட்டிக்கேட்டால் நான் இப்படிதான் செய்வேன். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் என்று ஆணவமாகப் பேசுகிறார். அன்று இரவே சம்பந்தபட்டவர்களிடம் அவர் கணவர் போனில் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுதான் நிந்தியா வேலை செய்யும் லட்சணமா" என்று ஆவேசத்துடன் கூறினர்.