வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/12/2017)

கடைசி தொடர்பு:17:31 (09/07/2018)

தண்ணீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்..! கரூர் மக்கள் வேதனை

           

இப்படி குடிநீர் போற குழாய்கள்ல அஞ்சு இடங்கள்ல, உடைஞ்சு குடிநீர் இப்படி பீய்ச்சி அடிச்சு வீணாச்சுன்னா அதை நம்பி இருக்கிற 64 கிராமங்களுக்கு எப்படி குடிநீர் போகும்? என்று அதிகாரிகளைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தின் தெற்கே உள்ள கிராமங்கள் வானம் பார்த்த பூமியைக் கொண்டவை. அங்கே,1,500 அடிகளுக்கு கீழே போர் போட்டால்தான் குடிநீர் கிடைக்கும் என்கிற நிலைமை. இதனால், குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் அல்லாடிய அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று சில வருடங்களுக்கு முன்பு லாலாப்பேட்டை அருகே ஓடும் காவிரியில் இருந்து கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள 64 கிராமங்களுக்கு குடிதண்ணீர் கொண்டு போக, பல கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதனால், பிள்ளாப்பாளையம் தொடங்கி சிவாயம் வரை 64 கிராமங்களுக்கு இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால், ஸ்ட்ராங்கானக் குழாய்களை பதிக்காததால், பிள்ளாப்பாளையம் மற்றும் சில கிராமங்களில் கூட்டுக்குடிநீர் போகும் குழாய் உடைந்து, தண்ணீர் வெளியே பீய்ச்சி அடிக்கிறது. இதனால், கடந்த சில மாதங்களாக 64 கிராமங்களுக்கும் தண்ணீர் போகாமல், பொதுமக்கள் அல்லல்பட்டு வருகிறார்கள்.


 

இதுசம்பந்தமாக, நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், '64 கிராமங்களுக்கு இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் எவ்வித குடிநீர் தட்டுபாடும் இல்லாமல் இருந்துச்சு. ஆனால், தரமான குழாய்களைப் பதிக்காமல் போக, அது அங்கங்கே உடைந்து தண்ணீர் வெளியேறி, எல்லா கிராமங்களுக்கும் தண்ணீர் சப்ளை கிடைக்கலை. இதனால், 'குழாய்களை சரி பண்ணுங்க'ன்னு பொதுப்பணித்துறை அதிகாரிகளை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளையும் பார்த்து கோரிக்கை வைத்தோம். 'இத அவங்க லிமிட்டுல வரும் விஷயம்'ன்னு குடிநீர் வடிகால்வாரியமும், பொதுப்பணித்துறையும் மாறி மாறி கைக்காட்டுறாங்க. இதனால், கோபமான நாங்க போராட்டம் அறிவிச்சோம். உடனே, சில ஊழியர்கள் வந்து குழாய்ல தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இடத்துல கல்லைப் போட்டு அடைக்க பார்த்தாங்க. இதனால், உடைப்பு இன்னும் பெருசாயிட்டு. உடனே இதை சரி பண்ணலன்னா, மறுபடியும் போராட்டம்தான்" என்றார்கள்.