ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த பெண்! சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

   

 மானாமதுரையில் சேமிப்பு ஏலச்சீட்டு நடத்திய பெண் ஒருவர்,  பல லட்சம் ரூபாய்களை ஏமாற்றிவிட்டதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் லதாவிடம் பெண்கள் கூட்டாகச் சென்று மனு கொடுத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேசினோம், ‘சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாண்டியன் நகரைச் சேர்ந்த சித்ராதேவி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் நீண்ட காலமாக வேலைபார்த்து வந்தார். இவருடைய கணவர் சண்முகம், ஆட்டோ தொழிலாளி. எங்கள் நிறுவனத்தில் நீண்ட காலமாக நிரந்தப் பணியாளராக வேலைசெய்து வருவதாலும் உள்ளுரில் சொந்த வீடு இருப்பதாலும் நாங்கள்  சேமிப்பு சீட்டில் பணம் செலுத்திவந்தோம். 10,000 ரூபாய் செலுத்தினால், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 1000 ரூபாய் வட்டியாகத் தருவார். இப்படி ஒவ்வொருவரும் குறைந்தது 1 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கட்டியிருக்கிறோம். தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு எனக் கட்டி, நாங்கள் அவர்களிடம் பணம் வாங்கியிருக்கிறோம்.

ஏமாற்றும் நோக்கத்தோடு, நாங்கள் பணம் கட்டிய அட்டைகளை முன்கூட்டியே வாங்கிக்கொண்டார்கள். எங்களிடம் வாங்கிய பணத்தைக்கொண்டு ரகசியத் தொழில் செய்வதாகவும், அந்தத் தொழிலை சித்ராதேவியின் அண்ணி லதாவும், இவருடைய மருமகனும் நடத்திவருவதாகவும் சொன்னார். இந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் ராணுவத்தில் பணி புரிகிறார்கள். அந்த நம்பிக்கையில் பணம் கட்டினோம். பணத்தை மிஷின் வைத்துதான் எண்ணினார்கள். அந்த அளவிற்கு மக்கள் அதிகளவில் பணம் கட்டி சேமிப்புச் சீட்டில் சேர்ந்திருந்தார்கள். தற்போது, நாங்கள் பணத்தை கேட்டுப் போனால் எங்களை மிரட்டுகிறார்கள். உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்கிறார்கள். நாங்களெல்லாம் கூலி வேலை பார்த்து கிடைத்த பணத்தை சிட்டுக்குருவிபோல சேர்த்து வைத்த பணம் அது. ஆகையால், எங்களுக்கு அந்த மோசடிக்காரர்களிடமிருந்து பணத்தைத் திரும்ப வாங்கிக் கொடுங்கள்  என மனு கொடுத்திருக்கிறோம். நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்திருக்கிறார்’ என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!