வெளியிடப்பட்ட நேரம்: 08:59 (12/12/2017)

கடைசி தொடர்பு:17:13 (09/07/2018)

ராமேஸ்வரம் மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு: 23 மீனவர்களை சிறைப்பிடித்தது இலங்கைக் கடற்படை!

 கடந்த 11 நாள்களுக்குப்பின் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்தும் சென்றுள்ளது இலங்கைக் கடற்படை.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிசூடு

 

கடந்த மாத இறுதியில் வங்கக் கடலில் ஒகி புயல் உருவானதால், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. 11 நாள்களுக்குப் பின், ஒகி புயல் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள், நேற்றிரவு பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த தங்கள் வலைகளை அறுத்து விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி வந்துள்ளனர். அவ்வாறு தப்பி வரும்போது, படகை நோக்கி இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய சில படகுகள் சேதம் அடைந்த நிலையில், இன்று காலை கரை திரும்பின. ஆனால், மீனவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வலைகள் உள்ளிட்ட மீன்பிடிச் சாதனங்களை மீட்க முடியாததால், ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 விசைப்படகுகளையும், அதில் இருந்த 23 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு விசாரணைக்காகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ஒகி புயலின் தாக்கத்தினால், கடந்த 10 நாள்களுக்கு மேலாக மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் வருவாய் இன்றித் தவித்துவந்த மீனவர்கள், நேற்றுதான் மீன்பிடிக்கச் சென்றனர். அவ்வாறு சென்ற முதல் நாளிலேயே மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், மீனவர்களைச் சிறைப் பிடித்துச் சென்றும் இலங்கைக் கடற்படை அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது, மீனவர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.