தாய், மனைவி, குழந்தைகளை வெட்டிக்கொன்ற தொழிலதிபர்! சென்னையில் பயங்கரம்

சென்னை பல்லாவரத்தில் மனைவி, தாய் மற்றும் இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாமோதரன் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

பல்லாவரத்தை அடுத்த பம்மல் திருவள்ளுவர் நகரில் வசித்துவருபவர் தாமோதரன். அந்தப் பகுதியில் துணிக்கடை ஒன்றை தாமோதரன் கடந்த பத்து வருடங்களாக நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது வீட்டில் தாய் சரஸ்வதி, மனைவி தீபா மற்றும் 2  குழந்தைகளான ரோஷன் மற்றும் மீனாட்சி ஆகியோரைக் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, தாமோதரனும் இன்று காலை தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உயிரிழந்த 4 பேரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தாமோதரன், மீட்கப்பட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். தற்போது, அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவே தாமோதரன், தனது குடும்பத்தினரைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்னதாகவே, தனது பிறந்தநாளைக் கொண்டாடிய தாமோதரன், தற்போது இந்த விபரீத முடிவை எடுத்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தாமோதரன் வீட்டில் இருந்து 5 பக்கக் கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தாமோதரனின் உறவினர்களான குமரவேல், பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!