சர்வதேச கேரம், கூடைப்பந்து போட்டிகளில் சாதித்து வரும் மாணவர்கள்! | Students achieved in basketball matches

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (12/12/2017)

கடைசி தொடர்பு:12:10 (12/12/2017)

சர்வதேச கேரம், கூடைப்பந்து போட்டிகளில் சாதித்து வரும் மாணவர்கள்!

விளையாட்டுப் போட்டிகளுக்கும் வத்தலகுண்டுவுக்கும் அத்தனை பொருத்தம். பெரிய வசதிகள் இல்லாத நிலையிலும், சர்வதேச தரத்துக்கான வீரர்கள் இங்கு தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். ப்ரோ கபடிப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த பாஸ்கர் வத்தலகுண்டைச் சேர்ந்தவர். கபடி, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கேரம் என அனைத்து விளையாட்டுகளிலும் முன்னணியில் நிற்கிறது வத்தலகுண்டு. இந்தியாவின் கடைக்கோடியில் தென்மேற்கு மூலையில் இருக்கும் ஒரு சாதாரண நகரத்தில் இருந்து ஈசல்கள்போல் இத்தனை வீரர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என விளையாட்டுத் துறையில் பலரும் ஆச்சர்யப்படுவதுண்டு. இத்தனை வீரர்கள் உருவாகக் காரணமாக இருப்பவை இங்கிருக்கும் கல்வி நிறுவனங்கள். திறமையான விளையாட்டு ஆசிரியர்கள், ஆர்வமான மாணவர்கள் இணையும்போது, திறமையான வீரர்கள் வெளியே வருகிறார்கள். அடிப்படை வசதிகள்கூட முழுமையாக இல்லாத நகரில், சர்வதேசத் தரத்தில் விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணங்களுக்கு எங்கே போவது. ஆனாலும், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை நிரூபித்து வருகிறார்கள் இந்த வீரர்கள். 

வத்தலகுண்டு 

கடந்த மாதம் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தெற்காசிய கால்பந்துப் போட்டியில், இறுதிப்போட்டி வரை முன்னேறினார்கள் வத்தலகுண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள்.  டிசம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற கேரம் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்திருக்கிறார் இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி சத்யா. அகில இந்திய கேரம் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்தியா, மாலத்தீவு நாடுகளுக்கிடையேயான கேரம் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற சத்யா, இரண்டு ஒற்றையர் பிரிவு மற்றும் ஒரு இரட்டையர் பிரிவுகளில் விளையாடி 3:0 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கான கோப்பையை வென்றார். இவர், கடந்த ஆண்டு மாலத்தீவில் நடந்த சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த வாரம் நாமக்கல் மாவட்டத்தில் தெற்கு ஆசிய கிராமப்புற இளைஞர் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. அதில், தமிழக அணியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள் சிவகிரி, டோனிரிச்சர்ட், விக்ரம், விக்னேஷ்வரன், தினகரன், திலிப்குமார், சிபிசக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பாக விளையாடி அரையிறுதியில் உத்தரப்பிரதேச அணியை வீழ்த்தினார்கள். இறுதிப்போட்டியில் இமாசலபிரதேசத்துடன் மோதியவர்கள், 80:71 என்ற புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று தங்க மெடலை கைப்பற்றினார்கள்.  

கேரம், கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பள்ளி தாளாளர் சேவியர், பள்ளி முதல்வர் ரெக்ஸ்பீட்டர், உடற்கல்வி ஆசிரியர் வெண்மணி, கேரம் பயிற்சியாளர் பிரவீன்குமார் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டினார்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close