வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (12/12/2017)

கடைசி தொடர்பு:12:25 (12/12/2017)

`குடிநீரும் இல்லை; பள்ளிக்கூடமும் இல்லை' - 30 ஆண்டுகளாகத் தவிக்கும் கிராமம்!

கடந்த 30 ஆண்டுகளாக எந்த ஓர் அடிப்படை வசதியும் செய்துகொடுக்காத மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து திரண்டு வந்த கிராம மக்கள், குடிநீர், சாலை, பள்ளிக்கூட வசதி எதுவும் இல்லாமல் தவிப்பதாகக் குமுறுகிறார்கள். இனியாவது மாவட்ட நிர்வாகம் இந்தக் கிராமத்தைக் கண்டுகொள்ளுமா?

இதுபற்றி செந்தில்குமாரிடம் கேட்டதற்கு, ''நாங்க சேலம் மாவட்டதின் கிழக்கு திசை எல்லையான கெங்கவல்லி தாலுகா மண்மலை அஞ்சல் செங்கட்டு, தெற்கு காட்டுக் கொட்டாய் பகுதியில் வசிக்கிறோம். எங்க கிராமத்தில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இருக்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளாக எங்க ஊரில் உள்ள தண்ணீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. சாலைகள் போடவில்லை. குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று வர பேருந்துகள் விடவில்லை.

எங்க கிராமத்துக்கு மண் சாலையும் கிடையாது, தார் சாலையும் கிடையாது. எங்க ஊரிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் 7 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மங்கப்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்துக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பள்ளிக் குழந்தைகள் 7 கி.மீட்டர் நடந்து செல்லும் பாதை கரடு முரடான, குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கிறது.

நாங்கள் நகர் புறத்துக்கு வர வேண்டும் என்றால் பேருந்து ஏறுவதற்கு 7 கி.மீட்டர் மங்கப்பட்டிக்கு வந்து தான் பேருந்து ஏற முடியும். எங்க கிராமத்துக்கு எந்த ஓர் அடிப்படை வசதியும் கடந்த 30 ஆண்டுகளாக இல்லை. சம்பந்தப்பட்ட மண்மலை ஊராட்சியிடம் போய் முறையிட்டால் எங்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை. எந்த ஒரு மரியாதையும் கொடுப்பதில்லை. குடிப்பதற்கும் குளிப்பதற்கும் தண்ணீர் இல்லை. தண்ணீருக்காகப் பல கி.மீட்டர் காடு காடாகச் சுற்றி ஒரு குடம் தண்ணீர் எடுத்து வந்து உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்க கிராமத்தின மீது கருணை கூர்ந்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்'' என்றார்.