வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (12/12/2017)

கடைசி தொடர்பு:13:30 (12/12/2017)

ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க டெபாசிட் இழக்கும்! - எம்.எல்.ஏ அபுபக்கர் ஆரூடம்

``அ.தி.மு.க அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க டெபாசிட் இழந்து, இருக்கும் இடம் தெரியாமல் போகப்போகிறது” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரும் கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான முகம்மது அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

அபுபக்கர் எம்.எல்.ஏஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா சுதந்திரம் அடையும்போது எடுத்த உறுதிமொழியை எல்லாம் தவிடு பொடியாக்கி அதற்கு எதிர்மறையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது மோடியின் பா.ஜ.க ஆட்சி. மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர்கள் மீதான தாக்குதல் மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெறுகிறது.

மோடி அரசு எல்லாவற்றையும் மதக் கண்ணோட்டத்திலேயே பார்த்துக்கொண்டிருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளைத் திணித்து தமிழகத்தை வஞ்சிக்கிறது. ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்கள் மீட்பு பணிகளில் மத்திய, மாநில அரசுகளின் வேகம் போதவில்லை. ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியான நிவாரணம் கிடைக்கவில்லை எனக் கூறி அத் தொகுதியைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்னாரே தர்ணா செய்கிறார். இதைவிட கேவலமான செயல் ஒன்றும் இருக்க முடியாது. தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி செலவில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் சொல்லி வருகிறார். அப்படி என்ன பணிகள் செய்யப்பட்டது, எங்கெங்கு செய்யப்பட்டது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் வெள்ளை அறிக்கை கேட்டும் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் இணைந்து தி.மு.க வேட்பாளர் மருகணேஷின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறது. இங்கு தி.மு.க வெற்றி பெறுவது உறுதி. இந்த வெற்றி தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு அடிகோலாக அமையப்போகிறது. தற்போதுள்ள அ.தி.மு.க அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கிறார்கள். எனவே, ஆர்.கே.நகரில் அ.தி.மு.க டெபாசிட் இழந்து இருக்கும் இடம் தெரியாமல் போகப்போகிறது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க