வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (12/12/2017)

கடைசி தொடர்பு:16:00 (12/12/2017)

சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கௌசல்யா தந்தைக்கு தூக்குத்தண்டனை! திருப்பூர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

தமிழகத்தை உலுக்கிய உடுமலைப் பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என்று திருப்பூர் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கர் - கௌசல்யா தம்பதியை கடந்த 2016 மார்ச் 13-ம் தேதியன்று,  உடுமலையில் பட்டப்பகலில் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது.  அதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி கெளசல்யா, படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்றுக் குணமடைந்தார். சங்கர் படுகொலை தொடர்பாக கொலை, வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, கெளசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ்கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 11 பேரை கைதுசெய்தனர். 

திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 8 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களுள், கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டிதுரை மற்றும் பிரசன்ன குமார் (கல்லூரி மாணவர்) ஆகிய மூவரைத் தவிர மற்ற எட்டுப் பேரும் குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். 

இந்த வழக்கில், கௌசல்யாவின் தந்தைக்கு தூக்குத் தண்டனையுடன் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார். மேலும், ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், தமிழ் கலைவாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகியோருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல குற்றம் சாட்டப்பட்ட தன்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், மற்றொரு குற்றவாளியான மணிகண்டனுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.