ஆர்ப்பாட்டம் போர்க்களமானது! ; விடுதலைச் சிறுத்தைகள்- பி.ஜே.பி மோதலால் சீர்காழியில் பதற்றம்

நாகை மாவட்டம் சீர்காழியில், திருமாவளவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பி.ஜே.பி.யினர் மீது விடுதலை சிறுத்தைகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.  இதில், பி.ஜே.பி-யினர் 7 பேர் படுகாயமடைந்தனர்.  தாக்குதல் நடத்தியது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தற்போது, சீர்காழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

'இந்துக் கோயில்களை இடிக்க வேண்டும்' என்று திருமாவளவன் பேசியதாகக் கூறி, சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் எதிரே, நேற்று பி.ஜே.பி-யினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மாவட்டத் தலைவர் வெங்கடேசன் பேசிக்கொண்டிருந்தபொது, 50-க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு எதிரே நின்றுகொண்டு திருமாவளவனை ஆதரித்தும், பி.ஜே.பி-யை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர்.  

அதன்பிறகு, திடீரென அங்கு கிடந்த கல் மற்றும் இரும்பு பைப்புகளை எடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் மீது சரமாரியாக வீசினர்.  இதில், பி.ஜே.பி மகளிரணியின் பொதுச் செயலாளர் மாசிலாமேரி, லெட்சுமிகாந்தன், கனகசபை, அன்புச்செல்வன் உள்ளிட்ட 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதையடுத்து, இரு கட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.  பொதுமக்கள், சம்பவ இடத்திலிருந்து அலறியடித்து ஓடினர்.  இதனால், அப்பகுதியே போர்க்களம்போல காட்சியளித்தது.  பி.ஜே.பி-யினர் தாக்கப்பட்டதற்கு மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி செயலாளர் அகோரம் தலைமையில், சுமார் 500 பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  அவர்களைச் சமாதானப்படுத்திய டி.எஸ்.பி சேகர், தாக்குதல் நடத்தியவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.  விடுதலைச் சிறுத்தைகளின் மண்டலப் பொறுப்பாளர் வேலுகுணவேந்தன், ஸ்டாலின், காமராஜ் உள்ளிட்ட 21 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.  

விடுதலைச் சிறுத்தைகளைக் கைதுசெய்ததைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்டோர் சீர்காழி பேருந்துநிலையம் முன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  போலீஸாரின் சமாதான பேச்சுவார்த்தை எடுபடவில்லை.  அப்போது போலீஸாருக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.  இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் செல்வி ஆகிய இருவரையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளினர்.  இதனால் கடுப்பான போலீஸார், தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர். இதனால், ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  காயமடைந்த 7 பேரில் அன்புச்செல்வன், கனகசபை ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.  தஞ்சை டி.ஐ.ஜி., லோகநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் நகரின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அமைதி திரும்பிவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!