உணவு, தண்ணீர் கிடைக்காமல் கடலில் பலர் உயிரிழப்பு! விஜயதாரணி எம்.எல்.ஏ அதிர்ச்சித் தகவல்

குமரி மாவட்டத்தில், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை என விஜயதாரணி எம்.எல்.ஏ., குற்றம் சாட்டினார். இது தொடர்பாகக் குமரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

நிவாரணம் கேட்கும் எம்.எல்.ஏ

குமரி மாவட்டத்தைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கிய ஒகி புயலின் தாக்கத்திலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. மீனவக் குடும்பங்கள் இன்னும் கண்ணீரில் மிதக்கின்றன. வாழை, நெல், ரப்பர் தோட்டங்களை இழந்து தவித்துவரும் விவசாயிகளின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இந்த நிலையில், குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக, மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவானிடம் மனு அளித்தார்.

அதில், ’ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தைத் தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 90 சதவிகிதம் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் மீனவர்கள், விவசாயிகள் எனப் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். போர்க்கால  நடவடிகை மேற்கொண்டு, குமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதிப்பில் இருந்து மீட்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான பிரின்ஸ், விஜயதாரணி ஆகியோரும் அப்போது உடன் வந்திருந்தனர். இது குறித்துப் பேசிய விஜயதாரணி எம்.எல்.ஏ., ‘’குமரி மாவட்டத்தை ஒகி புயல் பாதித்து 10 நாள்களைக் கடந்த போதிலும் இதுவரையிலும் மீட்பு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் நடக்கவில்லை. ஏராளமான மீனவர்கள் இன்னும் கடலில் தத்தளிக்கிறார்கள். அதனால், மீனவப் பெண்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

விஜயதாரணி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்துசென்ற பிறகும்கூட, கப்பல் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் போதிய அக்கறை காட்டவில்லை. மீட்பு நடவடிக்கைகள் மிகவும் மெத்தனமாக நடைபெற்றுவருகின்றன. மீட்புக்கு ஆட்கள் வருவார்கள்  எனக் கடலுக்குள் காத்திருந்து உணவு, தண்ணீர் கிடைக்காமல் பலர் உயிரிழந்துவருவது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு, உயிரிழந்த மீனவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை. ரப்பருக்கு ஹெக்டேருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு என்பது மிகவும் சொற்பம். குறைந்தபட்சம் ஹெக்டேருக்கு 5 லட்ச ரூபாயாவது வழங்க வேண்டும். நெல், தென்னை, ரப்பர் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது,. அவர்களுக்கும் இழப்பீட்டை அதிகப்படுத்தித் தர வேண்டும். குமரி மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்குள்ள எம்.எல்.ஏ-க்களை அழைத்துப் பேச வேண்டும்’’ என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!