பிங்க் நிற திருமண உடை, அன்கட் டைமண்டு, 67 டிசைனர் குழு - விராட்-அனுஷ்கா திருமண ஸ்பெஷல்ஸ் #Virushka | Take a look at newly wed Virat-Anushka's marriage celebrations!

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (12/12/2017)

கடைசி தொடர்பு:14:58 (12/12/2017)

பிங்க் நிற திருமண உடை, அன்கட் டைமண்டு, 67 டிசைனர் குழு - விராட்-அனுஷ்கா திருமண ஸ்பெஷல்ஸ் #Virushka

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த வெகு சிலருடைய திருமணங்களில் ஒன்றாகிப் போயிருக்கிறது விராட் - அனுஷ்கா திருமணம்.

இருவரும் ஒரே நேரத்தில் விடுமுறை எடுத்தபோது லேசாக சந்தேகித்த மக்கள்... ஒரே நாட்டுக்கு இருவரும் சென்றபோது 'அவங்க கல்யாணம் கன்ஃபார்ம்' என்றார்கள். எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை விராட் - அனுஷ்கா ஜோடி. மீடியாவிடம் பேசாமல் ஃபிளைட் ஏறிப்போனார் அனுஷ்கா. தொடர் வேலை... ஓய்வு தேவை என்று விடுமுறை வாங்கிக்கொண்டார் விராட்.

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று  இந்திய முறைப்படி விராட் - அனுஷ்கா ஜோடியின் திருமணம் அட்டகாசமாக நடைபெற்றது. அவர்களுடைய திருமணம் பற்றிய நிகழ்வுகளுக்குப் போகும்முன்... காதல் பிளாஷ்பேக் இதோ...

திருமண உடை

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு விளம்பரத்தில் ஒன்றாகச் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அங்கு  இருவருக்கும் பற்றிக்கொண்டது காதல். அன்றிலிருந்து விராட் விளையாடும்போது காதலி அனுஷ்காவையும் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோன்று, அனுஷ்காவும் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் விராட்டை உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார். 

மீடியா பிளாஷ் மழையில் இருவரும் அடிக்கடி நனைய ஆரம்பித்தார்கள். 2015 உலகக்கோப்பை அரையிறுதியில் 300 ரன்களுக்கு மேலான இலக்கை இந்தியா சேஸிங் செய்யும்போது, விராட் கோலி ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அனுஷ்கா ஷர்மா கேலரியில் அமர்ந்திருந்தார். அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் சுற்றுவதால்தான் விளையாட்டில் கோட்டை விடுகிறார் என்கிற ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளானார்கள் விராட்டும் அனுஷ்காவும்.

நன்றாக ஆடியபோது கேலரியில் அமர்ந்திருந்த அனுஷ்காவுக்கு பிளையிங் கிஸ் கொடுத்தார் விராட். அவர் ஆட்டம் சரியாக இல்லாததுக்கு அனுஷ்காதான் காரணம் என்று சமூக வலைதளங்களில் அனுஷ்கா ட்ரோல் செய்யப்பட கொதித்தெழுந்த விராட்... “அனுஷ்கா ஷர்மாவை ட்ரோல் செய்பவர்களை நினைத்து வெட்கப்படுகிறேன். அனுஷ்கா எனது பாசிட்டிவிட்டி” என்று  ட்விட் செய்து, தன் காதலியை விட்டுக் கொடுக்காமல் பதில் அளித்தார் விராட். அந்த ட்வீட்டுடன்,  விராட் கோலி ட்வீட் செய்த 'shame' என்கிற புகைப்படம் ஒன்றும் வைரலானது. அதன் பிறகு இருவரும் பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டவில்லை. இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்கிற வதந்திக்கு றெக்கை முளைக்க ஆரம்பித்த தருணம் அது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் காதலில் இருவரும் தீவிரமாக இருந்தார்கள்.

இந்நிலையில், இவர்களின் திருமண ஏற்பாடு நண்பர்கள் மற்றும் மிக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றுள்ளது. 

திருமண மற்றும் நிச்சயதார்த்த உடை :

திருமண உடையில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் அழகாக இருந்தார்கள். அனுஷ்காவின் ஃபேவரைட் கலரான பிங்க் நிறத்தில் அவருக்கு ஆடை வடிவமைக்கப்பட்டது. கொல்கத்தா பிளாக் பிரின்டர்களால்  உருவாக்கப்பட்ட முத்துக்கள் பதித்த லெஹங்காவை அனுஷ்கா அணிந்திருந்தார். விராட், கைகளால் வடிவமைக்கப்பட்ட பிங்க் நிற குர்தாவை அணிந்திருந்தார். இருவரின் ஆடை மற்றும்  அலங்காரப் பொருள்களை வடிவமைத்தது பிரபல ஆடை வடிவமைப்பாளர் சபயாஷாச்சி முகர்ஜி (Sabyasachi Mukherjee). நிச்சயதார்த்தத்தின்போது அனுஷ்கா மெரூன் கலரில் ஸ்டோன்கள் பதித்த வெல்வட் சேலையை அணிந்திருந்தார். விராட் வெள்ளை நிற ஆடையும், நீல நிற கோர்ட்டும் அணிந்திருந்தார். 

 

திருமண நிச்சயதார்த்த உடை

அணிகலன்கள் :

ஈரானிய டர்க்கைஸ், புஷ்பராக கல்வகை, அன்கட் டைமண்டு மற்றும் ஜப்பானிய வளமான முத்து ஆகியவற்றைக் கொண்ட 22 காரட் தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட ஜிமிக்கியை அனுஷ்கா சர்மா அணிந்திருந்தார். இயற்கையான ரோஜாப்பூக்களைத் தொகுத்து ஆடைக்கு மேட்சாக தலையில் சூடியிருந்தார். 

விராட் - அனுஷ்கா தம்பதியின் திருமண உடை மற்றும் அலங்காரப் பொறுப்பு முழுவதையும் சபயாஷாச்சி முகர்ஜி (Sabyasachi Mukherjee) 67 டிசைனர் குழுக்களோடு இணைந்து 32 நாள்களுக்கும் மேலாக டிசைன் செய்த உடையில் இருவரும் ஜொலித்தனர்.  

திருமண அலங்காரம்

சமீபத்தில், டிசம்பர் 15-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகப் பல்வேறு புரளிகள் வந்த வண்ணம் இருந்தன. இருவரும் அதை மறுத்து வந்த நிலையில், தன் காதலி அனுஷ்காவை கரம்பற்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்தார் விராட்.  

இவர்களுடைய திருமண வரவேற்பு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமாத்துறை நண்பர்களுக்காக, டெல்லியில் வருகிற 21-ம் தேதியும், மும்பையில் வரும் 26-ம் தேதியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாழ்த்துகள் (விருஷ்கா) #Virushka என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் தற்போது ட்ரெண்டாகி வருகின்றது..

வாழ்த்துகள் விருஷ்கா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்