'எங்க அப்பா உடலை மீட்டுத்தாங்க'- ஒகி புயலால் உயிரிழந்த மீனவரின் மகள்கள் கலெக்டரிடம் கண்ணீர் | Daughters of fishermen who went missed during ockhi cyclone requests collector

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (12/12/2017)

கடைசி தொடர்பு:16:35 (12/12/2017)

'எங்க அப்பா உடலை மீட்டுத்தாங்க'- ஒகி புயலால் உயிரிழந்த மீனவரின் மகள்கள் கலெக்டரிடம் கண்ணீர்

ravindrans daughter giving pettition to collector

ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர் ரவீந்திரனின் உடலை மீட்டுத் தருமாறு, அவரது மகள்கள் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்துள்ளனர்.

தூத்துக்குடியில் தங்குகடல் பிரச்னையால், விசைப்படகு மீனவர்கள் ராமநாதபுரம், கன்னியாகுமரி போன்ற மற்ற மாவட்ட எல்லைக்குட்பட்ட கடலில் தங்குகடலில் தங்கி மீன்பிடித்துவருகின்றனர். கடந்த அக்டோபர் 28-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடல் பகுதியில், தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியைச் சேர்ந்த ரவீந்திரன், ஜெகன், ஜோசப், கினிஸ்டன், ஜூடு மற்றும் அவரது மகன் பாரத் ஆகிய 6 பேரும் முட்டம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரும் என 16 பேர்  விசைப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

ravindran குளச்சலிலிருந்து சுமார் 45 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். ஒகி புயலின் தாக்கத்தால் விசைப்படகு கவிழ்ந்து மீனவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்தபோது, மீட்புப்பணியில் ஈடுபட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெகன் மற்றும் முட்டம் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ், ஜான்சன் ஆகிய மூவரையும் மீட்டு, சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்கள் தற்போது உடல் நலம் பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், மீதமுள்ள 13 மீனவர்களின் நிலை என்ன ஆனது எனத் தெரியாமல் இருந்தது. விழிஞ்சம் துறைமுகப் பகுதியில் கரை ஒதுங்கிய 7 மீனவர்களின் உடல்களில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜூடுவின் உடல் அடையாளம் காணப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில், மீனவர் ரவீந்திரனின் உடலை மீட்டுத் தர வலியுறுத்தி அவரது இரு மகள்களும் ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் ரவீந்திரனின் மகள்கள் மேனகா, ராஸ்மி ஆகியோர், “ஒகி புயலில் சிக்கிய எங்க அப்பா இன்னும் கரை திரும்பவில்லை. எங்க அப்பாவுடன் கடல் தொழிலுக்குப் போன ஜெகன் உள்ளிட்ட 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்கள், எங்க அப்பா கடலில் மூழ்கி இறந்துவிட்டதை நேரில் பார்த்ததாகச் சொல்றாங்க. இந்த செய்தியைக் கேட்டு எங்க குடும்பமே நிலைகுலைஞ்சுபோச்சு. எங்க அப்பாவோட உடலை அரசு விரைவாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க